குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றிலும் சிறிதளவு எடுத்து நன்கு தட்டி, ஒரு டம்ளர் நீரில்போட்டு கொதிக்கவைக்கவும். ஆறியதும், அதை வடிகட்டி குடித்து வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்தால், இட்லி பூப்போலே மென்மையாக இருக்கும்.
* ஓமப்பொடியை வீட்டில் செய்யும் போது சரியான அளவில் மாவுக் கலவையைச் சேர்க்காமல் போவதால் ஓமப்பொடி மெல்லிசாக வராமல் போகலாம். இரண்டு கிண்ணம் கடலைமாவிற்கு ஒரு கிண்ணம் அரிசிமாவு என்ற விகிதத்தில் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.
* புதினா இலைகளை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி பொடி செய்யவும். சிறிதளவு கிராம்பையும் நைஸாகப் பொடித்து வைக்கவும். இரண்டையும் சேர்த்து ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தவும். தினமும் ஒரு கரண்டி புதினாக் கிராம்பு பொடியுடன் அரை தேக்கரண்டி பொடி உப்பு சேர்த்து கலந்து பல் துலக்கிவந்தால் வாய் மணக்கும். பல் சொத்தையைத் தடுக்கலாம்.
* கத்தி, தேங்காய்த் துருவி போன்றவை முனை மழுங்க இருந்தால், அலுமினியம் பாயில் பேப்பரில் சிறிதளவு உப்பை தூவி, அதில் கத்தி, தேங்காய் துருவியின் கூரான பகுதியை வைத்துத் தேய்த்தால் முனை கூர்மையடையும். வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம்.
* ஊறுகாய் செய்து பத்திரப்படுத்தி வைக்கும் ஜாடியில் சில நேரங்களில் பூஞ்சை பூத்துவிடும். அதை தவிர்க்க ஜாடியை சுத்தமாக கழுவி வெயிலில் நன்கு உலர்த்திய பிறகு நல்லெண்ணெய் சில துளிகள் எடுத்து ஜாடியின் உள்புறம் முழுவதும் லேசாக தடவிய பிறகு ஊறுகாயைப் போட்டு வைத்தால் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பூஞ்சையும் பூக்காது.
* எண்ணெய்ப் பாட்டில்களின் மேல் அல்லது உள்ளேயோ எண்ணெய்ப் பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். சோப்பை பயன்படுத்தி அதைத் தேய்த்துக் கழுவினாலும் போகாது. தேவையான அளவில் அரசிமாவு எடுத்து பாட்டிலின் வெளிப்புறமாக தேய்த்து பிறகு தண்ணீரில் கழுவவும். பிறகு உள்ளேயும் சிறிது போட்டு பிரஷ்ஷால் தேய்த்து தண்ணீரில் கழுவவும். அதன்பிறகு தேவையானால் சிறி தளவு சோப்புத் தூள் அல்லது லிக்விட் சோப்பை போட்டு தேய்த்து தண்ணீர் விட்டு சுத்தமாக்கவும்.
– அ.ப.ஜெயபால்.

Related posts

ஒரு குவளை நீர் கொடுங்கள் சொல்கிறார் தேவதைகளின் தேவதை!

AI ரிடச்!

தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது: ஐகோர்ட் கேள்வி