பிடிஎஸ் இசைக்குழு மீது அடிமையால் விபரீதம் கப்பல் மூலம் தென்கொரியாவுக்கு செல்ல ரூ.14,000 பணத்துடன் புறப்பட்ட மாணவிகள்: காட்பாடி ரயில் நிலையத்தில் தவித்தபோது மீட்பு

கரூர்: பிரபல பாப் இசைக்குழுவான பிடிஎஸ்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் சிலர் இசைக்குழுவின் மீது உள்ள மோகத்தால் ஏதாவது வினோதமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிடிஎஸ் குழு மீதான மோகத்தால் வீட்டைவிட்டு வெளியேறி தென்கொரியாவுக்கு செல்ல முயன்று தவித்த மாணவிகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான 3 மாணவிகளுக்கு தென்கொரியாவில் இயங்கி வரும் பிடிஎஸ் இசைக்குழு மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த இசைக்கு அடிமையான மாணவிகள் தென்கொரியா செல்வதற்கான பணத்தை சேர்த்துள்ளனர். மேலும், இணையத்தின் மூலம் தென்கொரியாவுக்கு வழி தேடிய மாணவிகள் சென்னை வந்து அங்கிருந்து விசாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்து கப்பலில் தென்கொரியா செல்ல திட்டம் வகுத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 4ம் தேதி பள்ளிக்கு வழக்கம்போல் கிளம்பி 3 மாணவிகள் சேமித்து வைத்த ரூ.14,000 பணத்தை கொண்டு நேராக ஈரோடு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இதற்கிடையில் பள்ளிக்கு சென்ற மாணவிகளை காணவில்லை என்று பெற்றோர்கள் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மாணவிகளை தேடி வந்தனர். 2 நாட்களில் 6 ஆயிரம் செலவானதால் கையில் இருக்கும் ரூ.8000 வைத்து தென்கொரியா செல்ல முடியாது என்று மாணவிகள் நினைத்துள்ளனர். இதையடுத்து சென்னை சென்டிரலில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் ஏறியுள்ளனர். அப்போது காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது திண்பண்டம் வாங்க 3 பேரும் ஜனவரி 5ம்தேதி அதிகாலை 2மணியளவில், இறங்கியுள்ளனர்.

அப்போது ரயில் கிளம்பியதால் 3 பேரும் ரயில் நிலையத்தில் தனியாக இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், ‘3 மாணவிகளும் கரூர் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் செல்போன் மூலம் தென்கொரியா சியோலில் இயங்கி வரும் பிரபல பாப் இசைப்பாடல் குழுவான பி.டி.எஸ் குறித்து தெரிந்துள்ளனர்.

அதில் சேர விரும்பிய மாணவிகள் கரூரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து விசாகப்பட்டினம் சென்று, கப்பல் மூலம் தென்கொரியா செல்வது என முடிவு செய்துள்ளனர். இசைகுழுவில் சேர செல்போனில் கூகுள் மூலம் கொரிய மொழியின் சில வார்த்தைகளையும் பழகிக்கொள்ள முயற்சித்துள்ளனர். அருகில் வசிக்கும் ஒருவரிடம் தென்கொரிய மொழி பற்றி கேட்டறிந்துள்ளனர் என தெரியவந்தது. இதையடுத்து காட்பாடி சென்ற போலீசார், 3 பேரையும் நேற்று முன்தினம் கரூர் அழைத்து வந்தனர். பின்னர் மூவரையும் அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பையை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

திருவாரூர் கோட்டக்கச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

ஒரு முறை அமைத்தால் 20 ஆண்டுகளுக்கு பலன் பசுமைக்குடில் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்