மதுரை அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்பி குறித்து அவதூறு பேச்சு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக புகார்

சென்னை: கனிமொழி எம்பி குறித்து மதுரை அதிமுக மாநாட்டில் அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையில் அதிமுக மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பெயரை அவதூறு பரப்பும் வகையில் பாடலாக பாடி அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் நடந்து கொண்டார்.

அதிமுகவை சேர்ந்த நபர்களும், தலைவர்களும் பாடல்களை ரசித்தபடி அமர்ந்து, அதை கண்டுகொள்ளாமல், கூட்டு சதி செய்து அவதூறு பரப்ப தூண்டியுள்ளனர். பொது மேடையில் பாடல்கள் பாட வைத்த அதிமுகவை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. எடப்பாடி மீது நடவடிக்கை கோரி மனு: திமுக மாநில மகளிரணி அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் கன்னியாகுமரி எஸ்பியிடம் அளித்துள்ள புகார் மனுவில், அதிமுக மாநாட்டில் முதல்வர்,

அமைச்சர் மற்றும் கனிமொழி எம்.பி. குறித்து பாடல் குழுவினர் மூலம் ஆபாசமாக பாட்டுப்பாடியும், அநாகரிகமான முறையில் பேசியதை முன்வரிசையில் அமர்ந்து ரசித்த எடப்பாடி பழனிசாமி, மாநாட்டுக்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள், பாடலை பாடிய நபர்கள் மீதும், ஒளிபரப்பு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதேபோல மதுரை டிஐஜி, விருதுநகர், திருப்பத்தூர், திருப்பூர் எஸ்பிக்களிடமும் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்