Sunday, June 30, 2024
Home » வானம் பார்த்த பூமியில் வாசம் வீசும் சம்பங்கி!

வானம் பார்த்த பூமியில் வாசம் வீசும் சம்பங்கி!

by Porselvi

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி ஒரு வானம் பார்த்த பூமி. குறைந்த அளவில் கிடைக்கும் நீரை வைத்து நிறைவாக சாகுபடி செய்கிறார்கள் இந்தப் பகுதியின் விவசாயிகள். அதிலும் சம்பங்கிப்பூக்கள்தான் இந்த ஊரின் வயல்களில் எங்கும் வியாபித்திருக்கின்றன. திருக்கானூர்பட்டி மட்டுமல்ல. அருகில் உள்ள வல்லம், மருங்குளம், குறுங்குளம் உள்ளிட்ட ஊர்களிலும் சம்பங்கி சாம்ராஜ்யம்தான். இந்த ஊர்களின் சாலையில் பயணிக்கும்போதே சம்பங்கி வாசம் நம்மை வரவேற்கிறது. இத்தகைய ரம்மியமான சூழலில் திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த சம்பங்கி விவசாயி செபஸ்தியாரைச் சந்தித்தோம்.

“ பல வருசங்களுக்கு முன்னால் இந்தப் பகுதி மானாவாரியாக இருந்தது. மழை பெய்தா விவசாயம். இல்லாட்டி ஒன்றும் இருக்காது. அப்புறம் கிணறு வெட்டி தண்ணீர் இறைச்சு சாகுபடி செஞ்சோம். இப்போ இலவச மின்சாரத்தால் பம்பு செட்டு போட்டு சாகுபடி செய்யறோம். ஆரம்பத்துல இந்த பகுதியில ரோஜா சாகுபடி, கடலை சாகுபடின்னு செய்தாங்க. தஞ்சை பூக்கார சந்தைக்கு போனா ரோஜாப்பூவுக்கு நிகரா சம்பங்கி பூ வந்து குவியும். ரோஜாப்பூவை தவிர்த்து வேறு என்ன சாகுபடி பண்ணலாம்னு நினைச்சப்போதான் சம்பங்கி பூ ஞாபகம் வந்துச்சு.இந்தப் பக்கம் யாரும் சம்பங்கி பூ சாகுபடி செய்யலை. வெளியூருல இருந்துதான் தஞ்சாவூருக்கு வரும். இதை செஞ்சா என்னன்னு நினைச்சேன். சம்பங்கி சாகுபடி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கிட்டு களத்தில இறங்கினேன். ஆரம்பத்துல இந்த சாகுபடி செய்யறது கொஞ்சம் சிரமமாக இருந்துச்சு. அனுபவம்தானே நல்ல ஆசிரியர். அனுபவத்துல கத்துக்கிட்டதுதான் இந்த சம்பங்கி சாகுபடி. ஆர்வத்தோட உழைப்பையும் கொடுத்தா நிச்சயம் வெற்றிதான். அப்படித்தான் இப்போ இந்த சம்பங்கி சாகுபடியில வெற்றி கிடைச்சி இருக்கு. நான் சாகுபடி செய்யும்போது ஒன்றிரண்டு பேர்தான் செய்தாங்க. இப்ப நிறைய பேர் வந்துட்டாங்க. அதனால இப்போ வரத்து அதிகமாயிடுச்சு.

கடந்த 6 வருசத்துக்கு முன்னாடி திருக்கானூர்பட்டியில் இந்த சம்பங்கி சாகுபடியை முதன்முதலா செய்ய ஆரம்பிச்சேன். இதுக்கு வயலை ரெடி செய்யணும். முதல்ல 2 முறை உழுவு அடிக்கணும். அதாவது ரோட்டவேட்டர். அப்போ 15லிருந்து 20 டன் தொழு உரம். முழுமையாக மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம்தான். இதுதான் சம்பங்கி சாகுபடிக்கு வலுவான அஸ்திவாரம். வீட்டுக்கு எப்படி அஸ்திவாரம் செம ஸ்ட்ராங்கா போடுறோமோ அதுபோலதான் பயிர்களுக்கு தொழுவுரம். இப்படி தொழுவுரம் வலுவாக போட்டுட்டா சம்பங்கி கிழங்கு பதியம் போட்டா அருமையா வளரும். அதுக்குப் பிறகு 2 முறை மீண்டும் உழவு செய்வோம். இப்ப இது கல்டிவேட்டர். அதாவது மண்ணைப் பொலபொலன்னு மாற்றிடும். வேப்பம் புண்ணாக்கை நிலம் முழுவதும் தூவினா போதும். வயல் ரெடியாகிடும். அதுக்கு அப்புறம் சரியான இடைவெளியில் பார்களை அமைச்சுக்கிட்டு அதாவது 3 முதல் மூன்றரை அடி விட்டு சம்பங்கி சாகுபடிக்கு கிழங்கை நிலத்தில் ஊன்ற வேண்டும். அதுக்கு முன்னாடி மல்ச்சிங் ஷீட்டை வயல் முழுக்க விரிச்சிடுவோம். அதுக்கு அப்புறமா கிழங்கை ஊன்றுவோம்.

விதை ஊன்ற ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கிழங்கு தேவைப்படும். முறையா ஊன்றணும்னா ஒரு ஏக்கருக்கு கொஞ்சம் குறைவான விதைக்கிழங்கே போதும். இருந்தாலும் நாங்க விதைகளை நெருக்கமா ஊன்றுவோம். அதனால ஒரு டன் கண்டிப்பா வேணும். நான் மூன்றரை ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்யறேன். டெக்னாலஜி வளர்ந்து இருக்கு. சம்பங்கி கிழங்கு ஒருமுறை வெளியில் இருந்து வாங்கறதுதான். அதுக்கு அப்புறமாக நம்மகிட்ட இருக்கிறத பயன்படுத்திக்கலாம். நம்மள மாதிரி சம்பங்கி சாகுபடி செய்றவங்ககிட்ட இருந்தும் வாங்கிக்குவோம். மல்ச்சிங் ஷீட் வைச்சு அது உள்ள சொட்டுநீர்ப் பாசனத்திற்காக குழாயை வைத்திடுவோம். அப்பதான் கிழங்கு நல்லா வளரும். வயல் ஈரப்பதத்தோடு இருக்கும். இதுக்கு மேல தெளிப்பு நீர்க் குழாய். கிழங்கு வளர்ந்து சம்பங்கி செடி உயரமாக வரும்போது வெப்பம் அதிகமா இருக்கக்கூடாது. அதுக்காக தெளிப்பு நீர்ப் பாசனம் செய்யறோம். இது தண்ணீர் செலவை கம்மி பண்ணுது. அடியுரம் போட்டு வயலை ரெடி செஞ்சு இருக்கிறதுனால கிழங்கில் இருந்து தண்டுகள் நன்றாக வளர்ந்து வரும். அப்போ செடிகள் 3 மாதத்திற்கு அப்புறம் அறுவடைக்கு ரெடியாகும். 3 மாதத்தில் பார்த்தா ஒரு கிலோவில் இருந்து 3 கிலோ வரைக்கும் தினமும் அறுவடை செய்யலாம். நல்லா பூக்கும் தருணம் வரும்போது, அதாவது 6 மாதத்தில் இருந்து 7 மாதம் வரை அறுடை செய்ய ஆரம்பிச்சுடுவோம். அப்போதான் இத்தனை நாள் பாடுபட்டதுக்கு பலன் கிடைக்கும்.முதல் மாதத்தில் தினமும் 30 முதல் 35 கிலோ வரைக்கும் பூக்கள் வரும். அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் 75 முதல் 90 கிலோ வரைக்கும் கிடைக்கும். எப்படியும் ஒன்றரை வருசம் ஆகிடும் இந்த மகசூலை எடுக்க. அதுக்குப் பிறகு திரும்பவும் படிப்படியாக பூக்கள் குறைய ஆரம்பிக்கும்.

இதற்கிடையில் 3 நாட்களுக்கு ஒருமுறை களை எடுப்போம். அதிகாலை ஒரு மணி முதல் 4 மணிக்குள் பூக்களை அறுவடை செய்ய ஆரம்பிச்சிடுவோம். அடியுரம், கிழங்கு ஊன்றுவது, சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் அப்படின்னு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரைக்கும் செலவு பிடிச்சிடும். அதுக்குப் பிறகு 3 ஆட்களுக்கு தினசரி சம்பளம் ரூ.300, அதுக்குப் பிறகு பூக்கள் தஞ்சை சந்தைக்கு எடுத்துச் செல்லும் டிரான்ஸ்போர்ட் செலவு ரூ.150 அப்படின்னு செலவு ஆகும். எந்தப் பூவுக்குமே விலை ஏத்த இறக்கமாத்தான் இருக்கும். சம்பங்கி விசயத்திலும் அதேதான். இருந்தாலும் சம்பங்கிக்கு கொஞ்சம் நல்லாத்தான் விலை கிடைக்கும். தஞ்சை சந்தையில எப்படியும் சம்பங்கி பூ ஒரு கிலோ சராசரியா ரூ.50 ன்னு வித்துடும். ஒரு நாளைக்கு சராசரியா 40 கிலோ பூக்கள் கிடைக்குற பட்சத்துல ரூ.2 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். செலவுகள் போக தினமும் ரூ.1500 லாபமாக கிடைக்கும். என்னோட மனைவி மெர்லினும் என் கூட மாட ஒத்தாசையா வேலை பார்க்குறாங்க. அவங்களோட உதவியால செலவு கொஞ்சம் குறையுது. எப்படியும் மாதத்திற்கு ரூ.45 ஆயிரம் வரைக்கும் லாபம் கிடைக்கும். விலை ஏத்தம் இறக்கமாக இருக்குறதால மாசத்துக்கு 30 ஆயிரம் லாபம் நிச்சயமாக கிடைக்கும். விசேஷ நாட்கள்ல 100 ரூபாயைத் தாண்டி கூட விலை கிடைக்கும். அந்த சமயங்கள்ல லாபமும் பல மடங்குல கிடைக்கும்.

ஒன்றரை வருசத்திற்கு அப்புறம் விளைச்சல் குறைய ஆரம்பிக்கும். அப்போ 70 கிலோவில் இருந்து படிப்படியா குறைந்திடும். இடையில களை பறிக்கணும். அதுக்கு எப்படியும் 5 லிருந்து 6 பேர் வரைக்கும் தேவைப்படுவாங்க. எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது நாங்க முழிச்சுக்கிட்டு பூ பறிப்போம். சரியான இருட்டு நேரமாக இருக்கும். டார்ச் லைட்ட கட்டிக்கிட்டு பூக்களைப் பறிப்போம். அதிகாலை குளிருல 2 மணிக்கு ஆரம்பிச்சா 5 மணிக்குள்ள சந்தைக்கு பூவை அனுப்பிடுவோம். தஞ்சாவூர் சந்தையில மட்டும்தான் விற்பனை செய்கிறோம்.ஆறு மாதத்திற்கு அப்புறமா ஏக்கருக்கு டிஏபி 100 கிலோ, பொட்டாஷ் 50 கிலோ கலந்து தெளிக்கணும். இதை சொட்டுநீர்ப் பாசனக் குழாய் வழியா செடிக்கு செலுத்துவோம். அப்போதான் பூக்கள் இன்னும் அதிகம் பூக்கும். மறுபடியும் நாளொன்றுக்கு 20 கிலோ, 25 கிலோ, 30 கிலோன்னு கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா உசந்து அப்புறமா குறைய ஆரம்பிச்சிடும். இப்படி விட்டு விட்டு கூடுதலாகவும், குறைவாகவும் பூ கிடைக்கும். இதோட ஆயுள்காலம்னு பார்த்தா 3 வருசம்தான். இப்படி 3 வருசத்துல ஏக்கருக்கு தினசரி சராசரின்னு வைச்சுக்கிட்டா 20 கிலோ அறுவடை செய்யலாம். ஏன்னா இன்னைக்கு நிறைய பூக்கும். அடுத்த நாள் குறையும். அப்புறம் மீண்டும் உயரும். எவ்வளவு மகசூல் கிடைச்சாலும் சந்தையில வியாபாரிகள்கிட்ட கொடுத்திடுவோம். நல்ல நாளு, திருமண நாளு, பண்டிகை காலம் இப்படி இருந்தால் விலை உச்சத்துல இருக்கும். இல்லாட்டி கிலோ ரூ.40, ரூ.50ன்னு கிடைக்கும்.

மண்ணை நம்பி இறங்கினேன். இப்போ தினமும் நல்ல வருமானம். சரியா பராமரிப்பு செஞ்சு வந்தா மணக்கும் சம்பங்கி நல்ல வருமானத்தையும் கொடுக்கும்.சம்பங்கிப் பூக்களைப் பொறுத்த வரைக்கும் உறுதியா லாபம் கிடைக்கும். கிழங்கு 1 டன் ரூ.20 ஆயிரம், மல்ச்சிங் ஷீட்- 25 ஆயிரம், தெளிப்புக்கருவி- 40 ஆயிரம், உரச்செலவு, ஆள் கூலின்னு கணக்கு போட்டு பார்த்தா எப்படியும் ஒரு பங்கு செலவுக்கு 3 பங்கு லாபம் பார்த்திடலாம். அதாவது ரூ.10 ஆயிரம் செலவுன்னா ரூ.30 ஆயிரம் லாபம் பார்க்கலாம். இதுல மட்டும் சராசரின்னு கணக்கு போட்டு பார்க்க முடியாது. நஷ்டம் கிடையாது. லாபம்தான். என்ன இதோட ஆயுசு ஒரு நாள்தான். பறிக்காம விட்டா அன்னைக்கு நஷ்டம்தான். தலையில லைட்டை கட்டிக்கிட்டு கிடுகிடுன்னு அதிகாலையில ஆரம்பிச்சா விடியறதுக்குள்ள வேலையை முடிச்சிடுவோம். தூங்கிட்டா அவ்வளவுதான். அன்னைய பொழைப்பு போயிடும். இப்போ ஒன்றரை ஏக்கரில் அறுவடை செய்துக்கிட்டு இருக்கேன். மேலும் 2 ஏக்கர் கிழங்கு நட்டு இருக்கேன். இதுல முடியும்போது அதுல ஆரம்பிக்கும். இப்படியே தொடர்ந்து அறுவடை எடுக்குற மாதிரி பாத்துக்குவோம். எனக்குன்னு 2 மகள்கள், ஒரு மகன் இருக்காங்க. அமைதியான வாழ்க்கை. சம்பங்கி மட்டும் இல்லாம ஜிலேபி மீன் வளர்ப்பு, செண்டிகப்பூ, கடலை சாகுபடின்னு செய்துகிட்டு வரேன். காரணம் நிலத்தை சும்மா போட்டு வைக்க கூடாதுன்னுதான். முன்னாடி நான் மட்டும் இருந்தப்போ இன்னும் கூடுதல் வருமானம் வந்தது. இப்போ நிறைய பேர் வந்துட்டாங்க. அதுனால நாம சுறுசுறுப்பா விடியற்காலையில கொண்டு போய் கொடுத்தாதான் அன்றைய வருமானத்தை உறுதி செய்ய முடியும்’’ என விதைப்பு முதல் விற்பனை வரை விளக்கமாக பேசினார்
செபஸ்தியார்.

தொடர்புக்கு:
செபஸ்தியார்:
95859 94699.

You may also like

Leave a Comment

20 − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi