தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, பஞ்சாப்: 6 மாநிலங்களில் பாஜவுக்கு தண்ணி காட்டும் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் இழுபறி

எடுத்த எடுப்பிலேயே 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து 2024 மக்களவை தேர்தல் அச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது பா.ஜ. அதில் சிலர் சீட் வேண்டாம் என்று ஓடிவிட்டது வேறு கதை. ஆனால் தொடங்கிய இடத்திலேயே பா.ஜ நிற்பது தான் புதிய கதை. எந்த மாநிலங்களில் எல்லாம் கூட்டணி தேவை இல்லையோ அந்த மாநிலங்களில் முதன்முதலில் வேட்பாளர்களை அறிவித்து, எல்லாம் தயார் என்பது போல் பிம்பத்தை காட்டியது பா.ஜ அணி.

ஆனால் கூட்டணிக்கு தேவைப்படும் மாநிலங்களில் எல்லாம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் இப்போது திக்குமுக்காடிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இப்போதைய இந்தியாவின் நவீன அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் கூறி புளங்காகிதம் அடைந்து வந்தனர் பா.ஜவினர். ஆனால் பல நாட்களாக அவர் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கட்சியும், பா.ஜ கேட்கும் தொகுதிகளை ஒதுக்க தயாரில்லை.

பா.ஜ விதிக்கும் நிபந்தனைகளையும் ஏற்க தயாரில்லை என்பது இப்போது பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது. அதே சமயம் இந்தியா கூட்டணியில் அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு அவர்கள் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி விட்டனர். இதோ பாஜ முயற்சிகளை இழுத்தடிக்கும் மாநிலங்களும், கட்சிகளின் விவரமும்:

* தமிழ்நாடு-39
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2019 மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வென்று சாதித்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிகரமாக தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டது. ஆனால் எதிர்முகாமில் ஒரே குழப்பம். பா.ஜவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவிட்டார்.

ஆனால் எப்படியாவது கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை எடப்பாடியை பிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர் பிடிகொடுத்தது போல் தெரியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் உள்ளிட்டோரை இணைத்துக்கொண்டு ெபரிய வாக்குவங்கி உள்ளது போல் பிம்பத்தை கட்டமைத்து காட்டுகிறது பா.ஜ. மேலும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாமக, தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க வலைவிரித்து வருகிறது.

* பஞ்சாப்-13
பஞ்சாப் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசம். அங்கு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம்ஆத்மி கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதாக அறிவித்து களத்தில் இறங்கி விட்டன. ஆனால் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் கூட்டணிக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது பா.ஜ. அதிலும் மொத்தம் உள்ள 13 தொகுதியில் பாதிக்கு பாதி வேண்டும் என்கிறார் அமித்ஷா. சாணக்கியரின் பிடியில் இருந்து நழுவிக்கொண்டு செல்கிறார் சிரோண்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்.

* பீகார்-40
இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் நிதிஷ்குமாரை இழுத்து பிடித்து தங்கள் அணியில் இணைத்து, இந்தியா கூட்டணியை கலகலக்க வைத்து விட்டதாக காட்ட விரும்பியது பா.ஜ. இப்போது அங்கு எதுவுமே செய்ய முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. நிதிஷ்குமார், ஜிதன்ராம் மஞ்சி, ராம்விலாஸ் பஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ், பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ஆகியோர் கேட்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுக்கவும் முடியாமல், கூட்டணியை அறிவிக்கவும் முடியாமல் அரசியல் சாணக்கியர் திணறி வருகிறார்.

* மகாராஷ்டிரா-48
2019 தேர்தலில் 41 இடங்களை கைப்பற்றியது பா.ஜ அணி. அப்போது சிவசேனாவுடன் கூட்டணி. இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே இந்தியா கூட்டணியில். எனவே தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியை உடைத்து, கட்சி பெயர் சின்னத்தை அஜித்பவார் மற்றும் ஷிண்டேவுக்கு வழங்கி அவர்களுக்கு துணைமுதல்வர், முதல்வர் பதவிகளையும் கொடுத்து அழகுபார்த்துள்ளது பா.ஜ. ஆனால் கூட்டணி பேரம் படியவில்லை. 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்க மும்பை சென்றார் அரசியல் சாணக்கியர்.

விடிய விடிய பேசியும் ஷிண்டே தங்கள் அணிக்கு 20 சீட் கேட்டார். அஜித்பவார் 5 சீட் கேட்டார். வெறுத்துப்போன அமித்ஷா இருவரையும் டெல்லி வரச்சொல்லி விட்டு கிளம்பி விட்டார். அங்கும் தொடர்ந்து நேற்றுமுன்தினம் விடிய விடிய பேச்சுவார்த்தை. ஆனால் முடியவில்லை. பா.ஜ 32 இடங்களில் உறுதியாக போட்டியிடும். மீதம் உள்ள தொகுதிகளை வாங்கி விட்டு பிளைட் பிடித்து கிளம்புங்கள் என்கிறார் அமித்ஷா. ஆனால் சிரித்துக்கொண்டே அவருக்கே தண்ணி காட்டுகிறார்கள் ஷிண்டேவும், அஜித்பவாரும்.

* ஒடிசா-21
ஒடிசா இப்போது நிறைய மாறிவிட்டது. அங்கு சட்டப்பேரவை தேர்தலுடன், மக்களவை தேர்தலும் நடக்கிறது. 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து முதல்வராக இருக்கும் நவின் பட்நாயக்கிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார். அங்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடியிடம் பேசினார். அவரும் கிரீன் சிக்னல் காட்டினார்.

ஆனால் அமித்ஷாவிடம் பேச சொன்னார். அங்குள்ள 21 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதியும், 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 50 தொகுதிகளும் வேண்டும் என்று கறார் காட்டினார் அமித்ஷா. இப்போது வரை பதில் சொல்ல போனை எடுக்கவில்லையாம் நவின் பட்நாயக். அப்படி இருக்கிறது அங்கு கூட்டணி நிலைமை.

* கர்நாடகா-28
கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ தனியாக 25 இடங்களை பிடித்தது. மண்டியா தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் அம்பரிஷ் மனைவி சுமலதாவும் பா.ஜவுக்கு ஆதரவு தெரிவித்தார். இந்த முறை அங்கு காங்கிரஸ் அசுர பலத்தில் உள்ளது. என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் திணறுகிறது பா.ஜ. அங்கு மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து உள்ளது. இதற்காக தேவகவுடா அவரது குடும்பத்துடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இப்போது வரை கூட்டணி முடியவில்லை. மண்டியாவுடன் சேர்த்து 5 தொகுதி கேட்கிறார் தேவகவுடா. ஆனால் அமித்ஷாவை தனியாக சந்தித்த சுமலதா தனக்கு மண்டியா வேண்டும் என்கிறார். மேலும் தேவகவுடா கேட்கும் 5 தொகுதியை ஒதுக்க முடியாது, மண்டியா,ஹாசன், கோலார் ஆகிய 3 மட்டுமே என்கிறார் அமித்ஷா. இதனால் சுமலதா அதிருப்தியில் உள்ளார். அவர் கடந்த முறை போல் சுயேட்சையாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது. இழுத்தடிக்கிறது கூட்டணி அறிவிப்பு.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு