சிவகிரி அருகே மழை வெள்ளத்தால் சேதமடைந்து மணல் மேடாக காணப்படும் செங்குளம்: மராமத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

சிவகிரி: சிவகிரி அருகே மழை வெள்ளத்தால் கரைகள் உடைந்து மணல் மேடாக காட்சி அளிக்கும் செங்குளத்தை உடனடியாக தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா விஸ்வநாதப்பேரி கிராமம் பாகம் 2 கிராமத்தில் தேவிபட்டணம் பகுதியில் ஊருக்கு மேற்கே செங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2000ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களில் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுபோல் 2021ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரைகள் முழுவதும் உடைந்து தண்ணீர் வெளியேறியதுடன் குளமும் மணல் மேடானது. இதனால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக மாற்றுப்பாதையில் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக 500 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருந்தபோதிலும் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்து வருகின்றனர். எனவே மணல்மேட்டை அகற்றி குளத்தை தூர் வாருவதுடன் கரைகளையும் பலப்படுத்த வேண்டும், பழுதடைந்த குளத்தில் மடை மதகுகளையும் சீரமைக்க ேவண்டுமென என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 500 ஏக்கர் நிலமும் தரிசு நிலமாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்து வரும் பருவமழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், வருகிற நவம்பர் மாதத்தில் சவுதியில் நடைபெறலாம் என தகவல்!

கொலைக்கு பணம் தர வழிப்பறி: 7 பேர் கைது