சிவகங்கை அருகே வாகன சோதனையின்போது எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த இன்ஸ்பெக்டர்


காளையார்கோவில்: வாகன சோதனையின்போது எஸ்ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை, இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் அகிலன் (23). ரவுடியான இவர் கடந்த 2018ல் ஒரு பிரிவை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 12வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அப்போது 18 வயதிற்கு கீழே இருந்ததால் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார். தற்போது இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 18 வழக்குகள் உள்ளன. நேற்று காலை காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் எஸ்ஐ குகன் தலைமையிலான போலீசார், காளையார்கோவிலில் உள்ள கல்லல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரை சோதனையிடும்போது அதிலிருந்த ரவுடி அகிலன், எஸ்ஐ குகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ஆடிவேல், அவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு விழுந்த அகிலனை போலீசார் பிடித்து, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்ஐ குகன் ஆகியோர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரையும் எஸ்பி பிரவீன் உமேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு