சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் மஞ்சுவிரட்டிற்காக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை தெருவை சேர்ந்த ராஜேஷ், சாத்தரசன் பகுதியை சேர்ந்த நவீன், காளையார் கோவில் அருகே உள்ள அஜய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மஞ்சு விரட்டு போட்டிகளில் தனது மாடுகளை அவிழ்த்து விடுவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 22ம் தேதி பனங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தனது மாடுகளை அவிழ்த்து விட்டபோது அதனை புது பட்டியை சேர்ந்த மதன் என்பவரது நண்பர்கள் பிடித்ததாகவும் அதில் இரு தரப்பிற்கு ஏற்பட்ட தகராறு கை கலப்பானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரும் தனது நண்பர்களான ராஜேஷ், நவீன் அகியோர்களுடன் காளையார் கோவில் அருகே உள்ள கே.கே.ஆர் நகர் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தனது மாடுகளுடன் தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அண்ணன் தம்பிகளான ஜெயசூர்யா, சுபாஷ் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாக அங்கிருந்து தப்பிய ராஜேஷ், நவீன் ஆகிய இருவரும் காளையார்கோவில் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி. சிபி தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மஞ்சு வீட்டில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர் கொலை. கொள்ளை மற்றும் வெடி குண்டு சம்பவத்தால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related posts

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!