இளம்பெண் கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரஜ்வலின் தாய்க்கு எஸ்.ஐ.டி வலை

பெங்களூரு: எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் தலைமறைவான பவானி ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் மைசூரு, ஹாசன், பெங்களூரு, மண்டியா, ராம்நகரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரமாக தேடிவருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார். ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எஸ்.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட அவர் வீட்டு பணிப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மற்றும் தாய் பவானி ரேவண்ணா ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மே 3ம் தேதி கைதான ரேவண்ணா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். பெண் கடத்தப்பட்ட வழக்கில் பவானி ரேவண்ணா மீதும் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஜூன் 1ம் தேதி அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வீட்டிலேயே இருக்குமாறு முன்பே எஸ்.ஐ.டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.ஐ.டி அதிகாரிகள் ஹொலெநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டிற்கு காலை 10 மணிக்கு சென்றனர்.

ஆனால் பவானி ரேவண்ணா வீட்டில் இல்லை. அதிகாரிகள் 5 மணி வரை காத்திருந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினர். ஜூன் 1ம் தேதி மாலை 2 வழக்கறிஞர்கள் வந்து, பவானி ரேவண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், விரைவில் அவர் எஸ்.ஐ.டி முன் ஆஜராவதாக கூறியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து பவானியிடம் விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய எஸ்.ஐ.டி அதிகாரிகள், தலைமறைவாக இருக்கும் பவானியை தீவிரமாக தேடிவருகின்றனர். மைசூரு, ஹாசன், பெங்களூரு, மண்டியா, ராம்நகரம் ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களில் பவானி ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் தேடிவருகின்றனர். பவானி கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக கைது செய்யப்படுவார். இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், பவானியை எஸ்.ஐ.டி தேடிவருகிறது. தலைமறைவான பவானி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று பரமேஸ்வர் தெரிவித்தார்.

 

Related posts

தமிழகத்தில் உள்ள கோயில் நந்தவனங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கேள்வி

திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை