புதிய மதுபான கொள்கை வழக்கில் சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி துணைமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்டு மணீஷ் சிசோடியா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து கடந்த 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக மணீஷ் சிசோடியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழங்கிய தீர்ப்பில், “டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் உட்பட எந்த நிவாரணமும் தற்போது இருக்கும் சூழலில் வழங்க முடியாது.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது வழக்கின் விசாரணையை திசைத்திருப்பி பாதிப்படைய செய்யும்.மேலும் சிசோடியா பொது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததை இந்த வழக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது . சிசோடியா வழக்கின் சாட்சியங்களை சிதைத்து அழித்துள்ளார். வழக்கில் சாட்சிகளை பாதிக்கும் திறன் கொண்டவராகவும் அவர் உள்ளார் என்பதைக் காட்டுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சிசோடியாவை பொறுத்தவரை தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தான் இடைக்கால ஜாமீன் கேட்டுள்ளார். தேர்தல் பிரசாரமே அடுத்த ஒரு நாளில் முடிவடைய உள்ளது. எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு மதுபானக் கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் கேட்ட மணீஷ் சிசோடியாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார். இதற்கிடையே சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு