சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம் கேரளாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.1,010.19 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற மற்றும் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா வஉசி மைதானத்தில் நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: கோவை மக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அதற்கான பணி நடந்து வருகிறது. கோவைக்கு குடிநீர் பஞ்சம் வரவிட மாட்டோம். ஆழியாறு அணை தண்ணீரை, குடிநீராக பயன்படுத்த வேண்டும் என்றால் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்து வருகிறது. மேலும், கேரளாவில் இருந்து வருகிற தண்ணீருக்காக முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சரும், கேரளா அரசுடன் பேசி வருகிறார்கள். கடிதமும் எழுதியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்