சார் பதிவாளர் அலுவலங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் நுழையக்கூடாது: பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை

சென்னை: சார் பதிவாளர் அலுவலங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் நுழையக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையின் கீழ் 581 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக வருவதாக குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்து வருகிறது. குற்றச்சாட்டை அடுத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், சார் பதிவாளர் அலுவலங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் நுழையக்கூடாது. ஆவணம் எழுதுபவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அலுவலகப் பணி காரணமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் வரலாம். இது தவிர மற்றபடி ஆவணம் எழுதுபவர்கள் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக்கூடாது. மாவட்ட பதிவாளர்கள், மண்டல தலைவர்கள் ஆய்வின் போது நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என பதிவுத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்கு நுழையக்கூடாது என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் தரலாம் என்றும் பத்திரப்பதிவுக்கு வருவோர் பணம் கொண்டு வர தேவையில்லை, ஏடிஎம் கார்டு மூலம் பதிவு கட்டணம் செலுத்தலாம் எனவும் கூறியிருந்தார்.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு: மாநிலங்களவையில் இரங்கல்

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா