சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டு விமானத்தில் சென்னை வந்த கடலூர் வாலிபர் திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் சென்னை வந்த கடலூர் வாலிபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (57). இவருடைய மகன் பெரியசாமி (21). பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பெரியசாமி, குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்காமல் கூலி வேலை செய்து வந்தார். அவ்வப்போது 2 முறை வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டு, ஓரிரு மாதங்களில் வேலை பிடிக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியசாமி, சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஹெல்பர் வேலைக்கு சென்றார். அங்கும் வேலை பிடிக்காமல் இந்தியா திரும்ப முடிவு செய்தார்.

அந்த தனியார் நிறுவனம் பெரியசாமியை கடந்த 10ம் தேதி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் பெரியசாமி வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தது, அவருடைய பெற்றோருக்கு தெரியாது. இந்நிலையில் சில நாட்களாக பெரியசாமியிடம் இருந்து போன் எதுவும் வராததால், சங்கிலி பெரியசாமியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள், பெரியசாமி கடந்த 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கிலி மகனை தேடி நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் விமான நிலைய காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கடந்த 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் பெரியசாமி சென்னைக்கு வந்து குடியுரிமை, சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றது தெரிய வந்தது. மேலும் பெரியசாமி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டு உடனுக்குடன் திரும்பி வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்காவது சென்று விட்டாரா, இல்லையேல் யாராவது கடத்தி விட்டனரா, காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!