சிங்கபெருமாள் கோவில்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மணல் திட்டுகளால் விபத்துகள் அதிகரிப்பு: உடனே அகற்ற கோரிக்கை

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பரவிக்கிடக்கும் மணல் திட்டுகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே அதனை உடனே அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம், சுங்குவார்சத்திரம், பெரும்புதூர், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக சிங்கபெருமாள் கோவில்-பெரும்புதூர் சாலையில் 24 மணி நேரமும் கனரக வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்கும் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சாலை வழியாக சிங்கபெருமாள்கோவில், திருக்கச்சூர், ஆப்பூர், தெள்ளிமேடு, கொளத்தூர், வெங்கடாபுரம், பாலூர், சாஸ்தரம்பாக்கம், ஆகிய பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் தொழிற்சாலைக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், வாகன போக்குவரத்து மிகுந்த சிங்கபெருமாள் கோவில்-பெரும்புதூர் சாலையின் பல்வேறு இடங்களிலும் இருபுறமும் மணல் திட்டுகள் சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

மேலும், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, சிங்கபெருமாள்கோவில் அடுத்த ஆப்பூர் பகுதியில் உள்ள சாலையில் அதிகளவில் மணல் திட்டுகள் பரவிக்கிடக்கிறது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிங்கபெருமாள்கோவில் முதல் ஒரகடம் வரை உள்ள சாலையின் இரு புறமும் பரவிக்கிடக்கும் மணல் திட்டுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்