சில்லி பாயின்ட்…

* இந்தியா – நியூசி. மோதும் அரையிறுதி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் அதிக விலைக்கு விற்ற அஷோக் கோத்தாரி என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு டிக்கெட்டை ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
* ‘இந்தியா 1983ல் முதல் முறையாக உலக கோப்பையை வென்றபோது, தற்போதைய அணியில் உள்ள வீரர்கள் யாரும் பிறக்கக் கூட இல்லை. 2011ல் நாம் மீண்டும் உலக கோப்பையை வென்றபோது, பாதி பேருக்கும் மேல் விளையாடவே இல்லை. அதனால், உலக கோப்பையை இந்தியா எப்படி வென்றது என்பது பற்றி யாரும் பேசி நான் பார்த்தது இல்லை. எங்களுடைய கவனம் எல்லாம் ஒவ்வொரு போட்டியிலும் எப்படி சிறப்பாக விளையாடுவது, எந்த வகையில் ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்வது என்பதிலேயே உள்ளது. அது தான் இப்போதைய வீரர்களின் தனித்துவம்’ என்று கேப்டன் ரோகித் கூறியுள்ளார்.
* உலக கோப்பை அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்காவுக்கு உதறலெடுக்க ஆரம்பித்துவிடும். அவர்களது கடந்த கால வரலாறு அப்படி. இதற்கு முன்பு அரையிறுதிக்கு முன்னேறிய 4 முறையும் (1992, 1999, 2007, 2015) அந்த அணி தோல்வியையே தழுவியுள்ளது. இந்த சோக வரலாற்றை நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதும் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா மாற்றி எழுதுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
* ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 3 முறை தோல்வியைத் தழுவியுள்ளது. 2000 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 உலக கோப்பை அரையிறுதி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்விய இந்தியா, மும்பையில் இன்று அந்த தோல்விகளுக்கு பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
* தொடர்ச்சியாக 2 உலக கோப்பை தொடர்களில் 500+ ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை இந்திய அணி கேப்டன் ரோகித் வசம் உள்ளது. 2019 உலக கோப்பையில் 9 இன்னிங்சில் 648 ரன் குவித்த அவர், நடப்பு தொடரில் இதுவரை 503 ரன் குவித்துள்ளார்.

Related posts

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து