Saturday, September 21, 2024
Home » பட்டுப்புழு வளர்ப்பில் மாதந்தோறும் வருமானம்…

பட்டுப்புழு வளர்ப்பில் மாதந்தோறும் வருமானம்…

by Porselvi

ஒரு காலத்தில் மலை அடிவாரப் பகுதிகள் மற்றும் அதிக வெப்பநிலை இல்லாத பகுதிகளில் மட்டுமே பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் சாத்தியமாக இருந்தது. அங்கு மட்டுமே பட்டுப்புழு விவசாயம் அதிகளவு வளர்ச்சியும் அடைந்திருந்தது. ஆனால், தற்போதைய நிலை அப்படியில்லை. பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பட்டுப்புழு வளர்ப்பு அனைத்து சீதோஷ்ண நிலை களிலும் வளரக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், பட்டுப்புழு வளர்ப்பு மாதந்தோறும் நிலையான வருமானத்தைக் கொடுப்பதால் பலரும் பட்டுப்புழு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாயிகள் பரவலாக பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்த பட்டுப்புழு விவசாயியாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பட்டுப்புழு வளர்ப்பில் வெற்றிகரமாக செயல்பட்டு வருபவர்தான், நெல்லை சேரன்மகாதேவி அருகே உள்ள பனையங்குறிஞ்சி பகுதியைச் சேர்ந்த காந்தி.

ஒரு காலைப் பொழுதில் காந்தியை பார்ப்பதற்காக பனையங்குறிஞ்சியில் உள்ள அவரது மல்பெரி தோட்டத்திற்கு சென்றிருந்தோம். பட்டுப்பூச்சிகளுக்கு மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்த விவசாயி காந்தி எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கூடத்தை சுற்றிக்காண்பித்த காந்தி அவரைப் பற்றியும் அவரது பட்டுப்புழு வளர்ப்பின் அனுபவத்தைப் பற்றியும் பேசத்தொடங்கினார்.எனக்கு பூர்வீகம் எனப் பார்த்தால் சேலம்தான். அப்பா வங்கி ஊழியர் என்பதால் படிக்கும் காலத்தில் பல ஊர்களில் தங்கி இருக்கும்படி சூழல் அமைந்தது. கல்லூரிப் படிப்பிற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் பிஎஸ்சி படித்தேன். படிப்பை முடித்த கையோடு சுமார் 15 ஆண்டுகள் காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்தேன். இதில் ஒடிசா மற்றும் வெளிநாடுகளிலும் வேலை செய்தேன். ஒடிசாவிற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றபோது எனக்கு திருமணமானது. கடைசியாக நெல்லை மாவட்டம் இடைகால் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது அந்த ஆலை மூடும் நிலைக்குச் சென்றது. நமது உழைப்பை கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு நபர் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார். ஏன் நமது வளர்ச்சிக்காக நாமே பாடுபடக்கூடாது என யோசித்தேன். அப்போதுதான் விவசாயத்தில் ஈடுபட முடிவெடுத்தேன். எனது குடும்பம் விவசாயத்தை சார்ந்திராத குடும்பமாக இருந்தாலும், எனது உறவினர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட்டனர். அவர்களின் வயல்வெளிகளில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அதனால் துணிச்சலோடு விவசாயத்தில் இறங்கினேன்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லை சேரன்மகாதேவி அருகே உள்ள பனையங்குறிச்சியில் குறைந்த விலைக்கு நிலம் கிடைத்தது. அப்போதே நானும் எனது சகோதரரும் அங்கு நிலத்தை வாங்கியதால் பிற்காலத்தில் விவசாயம் செய்வதற்கு அந்த நிலம் துணையாக இருந்தது. விவசாயம் செய்ய முடிவெடுத்த பிறகு விவசாயத்தில் லாபம் தரும் அனைத்து பயிர்களையும் அந்த நிலத்தில் பயிரிட்டேன். அதோடு ஆடுவளர்ப்பு, மாடுவளர்ப்பு என விவசாயம் சார்ந்த தொழிலிலும் ஈடுபடத் தொடங்கினேன். கூடுதலாக பட்டுபுழு வளர்ப்பையும் தொடங்கலாம் என முடிவெடுத்தேன். நான் வேளாண்மைத்துறையை எடுத்து படித்தவன். இருந்தாலும் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து எந்த அனுபவமும் இல்லை. அதே நேரத்தில் இந்த தொழிலுக்கு அதிக முதலீடு தேவை இருந்தது. முன்பின் தெரியாமல் இந்த தொழிலில் இறங்கி பணத்தை இழந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன். அதனால், முதலில் சிறிய அளவில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு பட்டுப்புழு வளர்ப்பு பற்றி சிறிது சிறிதாக தெரிந்துகொண்டு அதன்பின் பெரிய அளவில் செய்யத் தொடங்கினேன்.புதிதாக இந்த தொழிலுக்கு வருபவர்கள் பட்டுப்புழுவின் வாழ்வியல் முறை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் கணக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக பட்டுப்புழுக்கள் வளரவளர அதற்கு தேவையான மல்பெரி இலைகளின் தேவையும் அதிகரிக்கும். சிலர் அதிக முதலீடு செய்து பட்டுப்புழு வளர்ப்புக் கூடத்தை அமைத்துவிடுவார்கள். அதன்பின்னர் பட்டுப்புழுவை வளர்க்க தேவையான மல்பெரி இலைகளை பெறுவதில் சிரமப்படுவார்கள். இதன் காரணமாக பயிரிடப்பட்ட மல்பெரி இலைகளுக்கு ஏற்ப பட்டுப்புழுக்களை வளர்ப்பதுதான் புத்திசாலித்தனம். பட்டுப்புழு வளர்ப்பதில் விவசாயிகளுக்கு பல நன்மைகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது நிலையான மாத வருமானத்தை பட்டுப்புழு வளர்ப்பில் பெறமுடியும்.

14 நாட்களில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டத் தயாராகிவிடும். அடுத்த ஒரு வாரத்தில் பட்டுப்புழு கூடுகள் முதிர்ச்சியாகி விற்பனைக்கு தயாராகிவிடும். சுமார் 21 நாட்களில் பட்டுப்புழு கூடுகளை விற்பனை செய்துவிடலாம். அடுத்த 9 நாட்களில் பட்டுப்புழு கூடத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்த வேண்டும். இதில் பட்டுப்புழு வளரும் காலத்தில் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப காலை, மாலை மல்பெரி இலைகளை இரையாக போடவேண்டும். அந்த நேரத்தில் புழுக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அதை பிரித்து வைக்க வேண்டும். இதை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். இதற்காக பட்டுப்புழு கூடத்தில் காலையும், மாலையும் நேரத்தை செலவிட வேண்டும். பின்னர் மதிய வேளையில் ஒரு முறை கண்காணிக்க வேண்டும். இதைச் செய்தால் அந்த மாதத்தின் முடிவில் சாதாரணமாக ரூ.1 லட்சம் வரை வருமானம் பார்க்க முடியும்.

பட்டுப்புழுக் கூடத் பராமரிப்பு செலவு, ஊழியர்களின் சம்பளச் செலவு என அதிகபட்சம் மாதத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில், பட்டுப்புழு முட்டைத் தொகுப்புகளை வாங்கும் செலவும் அடங்கும். அதாவது 1000 சதுர அடி பட்டுப்புழு வளர்ப்புக் கூடத்திற்கு தேவையான முட்டைத் தொகுப்புகள் வாங்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை செலவாகும். நான் 1000 சதுரஅடி பட்டுப்புழு வளர்ப்புக் கூடம் அமைத்துள்ளேன். இதில் புழுக்களை வளர்க்க 250 முட்டைத் தொகுப்புகளை வாங்குவேன். இந்த முட்டைகள் இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்களில் வைத்து வளர்க்கப்படும். குறிப்பிட்ட அளவு வளர்ச்சியடைந்தவுடன் அந்த புழுக்கள் விவசாயிகளிடம் வழங்கப்படும். ஒரு முட்டைத் தொகுப்பில் 500 புழுக்கள் வரை வளரும். அந்த வகையில் 1 லட்சத்து 25 ஆயிரம் புழுக்கள் வழங்கப்படும்.

சராசரியாக ஒரு முட்டை தொகுப்பில் வளரும் புழுக்கள் 1 கிலோ பட்டுப்புழு கூடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். அதன்படி மாதந்தோறும் சராசரியாக 200 கிலோ பட்டுப்புழுக் கூடுகளை உற்பத்தி செய்து வருகிறேன். ஒரு கிலோ பட்டுப்புழுக் கூடு தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.500க்கு வாங்கப்படுகிறது. இதனால் மாதந்தோறும் என்னால் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்ட முடிகிறது. எல்லா செலவுகளும் போக பட்டுப்புழு வளர்ப்பில் மட்டும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை லாபம் கையில் நிற்கும். இப்படிப்பட்ட தொழிலை யாரும் கைவிட மாட்டார்கள். தற்போது நெல்லை மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சரியான முறையில், முறையாக பட்டுப்புழு வளர்ப்பை செய்தோமே என்றால் நிச்சயம் அனைத்து விவசாயியுமே பயன்பெறலாம் என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் விவசாயி காந்தி.
தொடர்புக்கு
காந்தி: 70104 07793.

உஷார்… உஷார்…

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் உள்ளன. அப்படிப்பட்ட மையங்களில் சில இடங்களில் பட்டுப்புழு முட்டைகள் ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்படுகிற முட்டைகளில் இருந்து உருவாகும் இளம் பட்டுப்புழுக்களுக்கு பற்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் பெரிய அளவிலான மல்பெரி இலைகளை சாப்பிட முடியாது. இதனால், இளம் புழுக்கள் சாப்பிடும் வகையில் இலைகள் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு இரையாக கொடுக்கப்படுகிறது. இதனால் சில சமயம் இளம் பட்டுப்பூச்சிகள் சரியாகி இரை உட்கொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதனால், பட்டுப்புழு வளர்ப்பு மையங்களிடம் இருந்து இளம் பட்டுப்புழுக் கூடுகள் வாங்கும் விவசாயிகள் கவனமாக இருக்கவும்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi