சாதனைகள் படைக்கும் சிலம்பம் சகோதரிகள்!

2கே குழந்தைகள் என்றாலே அவர்கள் வயிற்றுக்கு கொஞ்சம் சோறு ஊட்ட வேண்டுமானாலும் கைகளில் மொபைலைக் கொடுத்தாக வேண்டியக் கட்டாயம் உள்ளது. அதிலும் ஆங்கில வழிக் கல்வி வந்தாலும் வந்தது தமிழில் பேசுவதையே மறந்தால் கூட பரவாயில்லை, அப்படிப் பேசுவதை ஏதோ கௌரவக் குறைச்சலாக சில பெற்றோர்களே நினைக்கும் காலமாகிவிட்டது. ஆனால் இதற்கிடையிலும் சாதிக்கும் குழந்தைகளும், ‘தமிழ் பேசும் என் குழந்தை’ என பெருமையாகச் சொல்லிக்கொள்வதுடன் அதில் சாதனைகளையும் படைக்க வைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜேஷ் – சித்ரா இவர்களின் மகள்கள் சம்ஹிதா ராஜேஷ் (11 வயது), மற்றும் தன்யதா ராஜேஷ்(7 வயது). இவர்களில் தன்யதா 2020ம் ஆண்டு 2 நிமிடங்கள் 3 நொடிகளில் ஆத்திச்சூடி 109 பாடல் களைப் பாடி 4 வயதில் உலக சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து சிலம்பம் கலையின் மீது ஆர்வம் உண்டாகவே அதைக் கற்றுக்கொண்டு சுருள் சிலம்பம் சுற்றிக்கொண்டே சம்ஹிதா 100 பாரம்பரிய அரிசிகளின் பெயர்களும், தன்யதா 75 அரிசிகளின் பெயர்களையும் கூறி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட், மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.

‘எங்க பள்ளியிலேதான் சில மாணவர்கள் சிலம்பம் கத்துக்கிட்டு அதிலே மேடை நிகழ்ச்சிகளும் செய்து காட்டினாங்க. அதைப் பார்த்தது முதல் எங்களுக்கும் சிலம்பம் மேல் ஆர்வம். அம்மாவிடம் சொன்னேன், எப்படியாவது சிலம்பம் கத்துக்கணும்ன்னு. அவங்களும் எங்களை சேர்த்துவிட்டாங்க. எட்டு மாசத்திலே நாங்க இந்த சாதனையை செய்திட்டோம்‘ ஆர்வமாக பேசுகிறார்கள் சம்ஹிதா மற்றும் தன்யதா. தொடர்ந்து பேசினார் அவர்களின் அம்மா சித்ரா. ‘எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். சின்ன வயதிலிருந்தே என்னதான் பள்ளிக் கல்வி இருந்தாலும் நான் வீட்டிலே தமிழ் இலக்கியம், இலக்கணம் எல்லாம் சொல்லிக் கொடுக்கறதுண்டு. என் கணவர் ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஒரு நாள் ரெண்டு பேரும் சிலம்பம் கத்துக்கணும்ன்னு ரொம்ப ஆர்வமா சொன்னாங்க. அவங்களைப் பொருத்தவரை சிலம்பம் என்கிறது ஒரு மாயவித்தை மாதிரி நினைச்சு கேட்டாங்க. எட்டு மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு சாதனை படைக்க வைக்கணும்ன்னு ஒரு எண்ணம். மாஸ்டர் கிட்டே சொன்னேன், சிலம்பம் பொருத்தவரை மூச்சுக்கும் நிறைய வேலை இருக்கும், அதற்கிடையில் சுற்றிக்கொண்டே வாயும் வேலை செய்தால் நிச்சயம் அதற்கு தகுந்த பயிற்சி வேணும்ன்னு மாஸ்டர் சொன்னார். அவரே அதற்கான பயிற்சிகளும் கொடுத்தார். நான் வீட்டிலிருந்தே பாரம்பரிய உணவுகள், காலை உணவு மிக்ஸ்கள், இயற்கையான முறையில் சருமம் மற்றும் குளியல் பொருட்கள் உட்பட விற்பனை செய்து வரேன். வீட்டிலும் பாரம்பர்ய அரிசிதான் உணவு. இந்த அரிசிகளின் உற்பத்தி எல்லாம் முன்பை விட ரொம்ப குறைஞ்சிடுச்சு. இதனாலேயே சிலம்பத்துடன் அரிசி பெயர்கள் சொல்லலாம் என்கிற முடிவு செய்தோம்.

நினைத்ததைக் காட்டிலும் அற்புதமான சாதனையாக மாற்றிக் காண்பிச்சாங்க என் குழந்தைகள். இதற்கு முன்பு 2020ல் ஆன்லைனிலேயே செய்த சாதனைதான் ஆத்திச்சூடி பாடல்களை 2 நிமிடங்கள் 3 நொடிகளில் முடித்துக் காட்டினா தன்யதா. அவள் சொல்வது ஆத்திச்சூடிதானா என்கிற சான்றிதழும் ஒரு புரபசர் உதவியுடன் பெற்று சாதனைக்கு அனுப்பி வைத்தோம். சாதனை சாத்தியமாச்சு‘ ஒரு பக்கம் குடும்பம், இன்னொரு பக்கம் குழந்தைகளின் சாதனை, எப்படி சாத்தியம் மேலும் தொடர்ந்தார் சித்ரா. ‘என்னுடைய கணவர் மாமியார், மாமனார், என்னுடைய பெற்றோர்கள் உட்பட எல்லாருமே குழந்தைகளுக்கு என்ன ஆர்வமோ அதைத்தான் கொடுக்க விரும்புவோம். மேலும் பெண்களுக்கு சிலம்பம் உள்ளிட்ட சில பயிற்சிகளுக்கு தடைபோடும் வழக்கம் இன்றும் கிராமங்களில் காண முடியுது. ஆனால் எங்க வீட்டில் அந்தத் தடையெல்லாம் இல்லாததும் சம்ஹிதா, தன்யதாவின் சாதனைகளுக்கு ஒரு காரணம். இதுமட்டு மின்றி சிலம்பம் துவங்கி பல போட்டிகளில் மேடல்கள், கோப்பைகள் இப்படி வீடு முழுக்க நிறைச்சி வெச்சிருப்பாங்க. சம்ஹிதாவுக்கு கணக்கு நல்லா வரும், அதில் பி.ஹெச்.டி செய்யணும்ங்கறதுதான் அவளுடய கனவு. சின்னவளுக்கு இன்னும் அவ்வளவு விவரம் வரலை, இப்போதான் 7 வயதாகுது. அவங்க என்ன படிக்க நினைக்கிறாங்களோ அதைப் படிக்கட்டும்ன்னு நானும் என் கணவரும் அவங்களுக்கு சப்போர்ட் செய்யத் தயாரா இருக்கோம். ரெண்டு பேருமே அபாகஸ் பயிற்சிகளும் எடுத்துக்கறாங்க. மேலும் இந்த மாதிரி விளையாட்டு, பயிற்சிகள் எடுக்கும்போது பொதுவாகவே படிப்பிலும் கவனச் சிதறல் குறைவாக இருக்கும். எப்போதும் மொபைல், டிவி இப்படி இல்லாம அந்தந்த நேரத்தில் எதைச் செய்யணுமோ அதைச் செய்யச் சின்ன வயதிலிருந்தே பழகிக்கிட்டாங்க. பெற்றோர்கள் அவங்க குழந்தைகள் கூட நேரம் செலவிட்டு முடிந்த வரை உடல் சார்ந்த பயிற்சிகள் எதாவது ஒன்றில் சேர்த்தால் படிப்பும் ஒரு பக்கம் முன்னேற்றம் பெறும்’அழுத்தமாகவே சொல்கிறார் இந்தச் சாதனை மகள்களின் தாய்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்