சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை ஜெகதீஷ் டைட்லர் குற்றவாளி: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் டெல்லி குருத்வாரா புல்பங்காஷ் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் பாதல் சிங், தாக்குர் சிங், கரண் சிங் என்ற மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரங்களை காங்கிரசை சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் தூண்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்தி வந்த சிபிஐ கலவரத்தில் டைட்லருக்கு தொடர்பில்லை என்று 2007ம் ஆண்டும், டைட்லர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று 2009ம் ஆண்டும் டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் சிபிஐ அறிக்கையை தள்ளுபடி செய்து, டைட்லர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கடந்த மாதம் ஜெகதீஷ் டைட்லரின் குரல் மாதிரியை சிபிஐ பதிவு செய்தது. இந்நிலையில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், “1984ம் ஆண்டு புல்பங்காஷ் பகுதியில் கூடியிருந்த கும்பலை ஜெகதீஷ் டைட்லர் தூண்டி விட்டதால், குருத்வாரா எரிக்கப்பட்டது. 3 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அவருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி