புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெரியார் பல்கலை பொறுப்பு பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை: சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர், பிரிவு அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன், நேற்று மாநகர போலீஸ் கமிஷனருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் (பொ) தங்கவேல் ஆகியோர் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை விதிகளுக்குப் புறம்பாக தொடங்கினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட்டடார். அதே நாளில் பல்கலைக்கழகப் பொறுப்புப் பதிவாளராக வேதியியல் துறை பேராசிரியர் விஸ்வநாதமூர்த்தி என்பவரையும் நியமித்தார். விஸ்வநாதமூர்த்தி ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளராக (செப்டம்பர் 3ம் தேதி) இருந்தபோது தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பூட்டர் பவுண்டேசன் சார்பில் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணுமூர்த்தி என்பவர், துணை வேந்தர் ஜெகநாதனுக்கும், பதிவாளர் தங்கவேலுக்கும் மூலக்கருவியாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

குறிப்பாக ஜெகநாதன், கடந்த 27ம் தேதி சூரமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு கையெழுத்திட சென்ற போது, விஷ்ணுமூர்த்தியும் சென்றுள்ளார். இது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. இதேபோல், அவரது மனைவியும் பூட்டர் பவுண்டேசன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். எனவே விஷ்ணுமூர்த்தி மற்றும் அவரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்