நீட் விலக்கு வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் இதுவரை 55 லட்சத்தை தாண்டியது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: நீட் விலக்கு வலியுறுத்தி நடந்து வரும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீட் விலக்கு வலியுறுத்தி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் இலக்கான 50 லட்சம் கையெழுத்துகளை குறிப்பிட்ட காலக்கெடுக்குள்ளாகவே கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை இணைய வழியில் 40 லட்சம்-அஞ்சல் அட்டை மூலமாக 15 லட்சம் என 55 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

தொடர்ந்து கையெழுத்திட்டு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் நீட் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நீட் எதிர்ப்புணர்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இது. எதிர்வரும் 17ம் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையெழுத்துகள் குவிகின்ற வகையில் நாம் தொடர்ந்து செயலாற்றுவோம். குடியரசுத் தலைவரின் ஒற்றைக் கையெழுத்தை பெறுவதற்காக நாம் பெற்றுக் கொண்டிருக்கும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தகுதி-தரம் என்று ஏமாற்றி நீட்டை திணிக்கும் பாசிஸ்ட்டுகள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்