இலைக்கட்சியின் பிரிந்த அணிகள் நடத்தும் போஸ்டர் யுத்தம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நாலா மூணா பிரிந்து கிடக்கும் இலைக்கட்சியில் நடக்கும் போஸ்டர் யுத்தம் பொதுமக்களையே முகம் சுளிக்க வைக்கிறதாமே தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் போஸ்டர் யுத்தம் தான் அனைத்து மட்டத்திலும் பேச்சாக இருக்காம்.. சேலத்துக்காரரின் இலைத்தரப்பு, பலாப்பழக்காரர் தரப்பு, குக்கர்காரர் தரப்பு மற்றும் சின்ன மம்மி தரப்பினர் என மாறிமாறி போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது மக்களை முகம் சுளிக்க வைக்கிறதாம்.. பலாப்பழக்காரர் மற்றும் சின்ன மம்மி தரப்பினர், கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துட்டு வர்றாங்க.. இதற்காக இரு தரப்பினரும் சேலத்துக்காரர் தரப்பிற்கு எதிராக போஸ்டர்களை அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியிருந்தாங்களாம்.. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்துக்காரர் தரப்பு, கொடுத்த காசுக்கு மேலே தலைமையை புகழ்ந்து ஓவரா கூவி, சுவரே தெரியாத அளவிற்கு போஸ்டர்களை ஒட்டி தள்ளிவிட்டதாம்.. இதோடு நிற்காமல், சமூகரீதியாக பலாப்பழக்காரர், குக்கர்காரர் செயல்படுவதாக கூறி சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருக்காங்க… வடமாநில நதி மாவட்டத்தில் இலைக்கட்சியின் ஏ டூ இசட் பிரிவினர் இடையே நடைபெறும் போஸ்டர் யுத்தத்தால், தேவையற்ற பிரச்னைகள், மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பைல் மூவ் ஆகணும்னா லட்சத்தில் பேரம் பேச தொடங்கும் அதிகாரி ஆட்சியர் மாற்றத்துக்கு அப்புறம் கப்சிப் ஆயிட்டாராமே…’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் முக்கியமான அந்த துறையில் இருக்கும் மறைந்த அரசியல் தலைவர் பெயரை கொண்ட அதிகாரி, எடுத்ததுமே லட்சத்தில் தான் பேரம் பேசுகிறாராம்.. தொடக்கமே லட்சமாக இருப்பதால், அவரிடம் பைல் மூவ் ஆக பேச்சு வார்த்தைக்கு செல்பவர்கள் எல்லாருமே அதிர்ச்சி அடைந்து ஓடும் நிலை இருக்காம்.. லட்சத்தின் லட்சியம் நிறைவேறாததால், இவரது டேபிளில் பல பைல்கள் மூவ் ஆகாமல் அப்படியே கிடக்கிறதாம்.. பலமுறை இவரை இடமாற்றம் செய்ய நடந்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு விட்டதாம்.. இப்போது அந்த மாவட்டத்துக்கு புதிய ஆட்சியர் வந்து பொறுப்பேற்று இருப்பதால் அந்த அதிகாரி கடந்த 4, 5 நாட்களாக ரொம்ப கப்சிப் ஆகி இருக்கிறாராம்.. விரைவில் இவரு இடம் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருக்குதுன்னு அந்த துறை சார்ந்த அலுவலர்கள் பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உலகத்துல தேர்ந்தெடுத்த பத்து அறிவாளியை விட சிறந்தவர் இலைக்கட்சி தலைவர்தான் சொல்லி தொண்டர்களை புல்லரிக்கச் செய்துவிட்டாராமே ஒரு நிர்வாகி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘மின் கட்டணம் உயர்ந்ததை கண்டித்து இலைக்கட்சியின் சார்பில் மாம்பழ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தியிருக்காங்க.. இதுல சிறப்பு அழைப்பாளரா இலைக்கட்சியின் இலக்கிய அணியின் மாநில செயலாளர் கலந்துக்கிட்டு பேசினாராம்.. இலைக்கட்சி தலைவர் வீட்டிலிருந்து தனது பேச்சை கேட்டுக்கிட்டே இருப்பாருன்னு நினைச்சு பேச்சை அவரு தொடங்கினாராம்.. திராவிடத்தின் கடைசி இருப்பே, வில் ஏந்திய தலைவனேன்னு இழுத்துக்கிட்டு போனாராம்.. இதன் உச்சகட்டமா உலகத்துல பத்து அறிவாளிகளை தேர்ந்தெடுத்தபோது அதில் ராஜாஜியும் ஒருவரா வந்தாரு.. இப்போது அதைவிட அறிவாளியா நமது இலைக்கட்சி தலைவர் இருக்காருன்னு ஒரு பிடிபிடிச்சாராம்.. இதை கேட்ட இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவே புல்லரிச்சிப் போனாங்களாம்.. இடையிடையே தனது இலக்கிய ஆற்றலைப்பற்றியும் பெருமையா பேசிக்கிட்டாராம்.. ஆனால் மின்கட்டண உயர்வு யாரால் வந்ததுன்னு தெரியாமலே பேசியிருக்காரு… மம்மி ஆட்சியின்போது தற்போதைய ஒன்றிய அரசு கொண்டு வந்த உதய் என்கிற திட்டத்தை ஏற்க மறுத்துட்டாங்களாம்.. ஆனா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மம்மி மறைவுக்கு பிறகு இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர், முட்டை மாவட்டத்தை சேர்ந்த மின் மந்திரியை அனுப்பி கையெழுத்து போட வச்சிட்டாராம்.. இதனால்தான் மின் கட்டணம் உயர்ந்துக்கிட்டு போகுது.. ஆனால் கரையும் கட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தேனிக்காரரின் ஆதரவார்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வாங்குவதை வாங்கிட்டு கனிம கடத்தலையும், பதுக்கலையும் காக்கிகளும், வருவாய் துறையும் அனுமதிக்கிறதா புகார் வருதே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை மாவட்டத்துல ஆறுகாடான ஒன்றியத்துக்கு உட்பட்ட வாடி, பாக்கம் போன்ற பகுதியில இருக்குற பால் ஆற்றங்கரை பகுதிகள்ல இருந்து கலவை கூட்ரோடு பகுதியில, நைட் 7 மணியில இருந்து 10 மணி வரைக்கும், இன்னொரு ஷிப்ட் விடியற்காலை 3 மணியில இருந்து காலையில வரைக்கும் மாட்டு வண்டியில ஆத்து மணலை கடத்தி, மறைவான இடத்துல பதுக்கி வெக்கிறாங்களாம்.. இந்த கடத்தலையும், பதுக்கலையும் பற்றி வருவாய்த்துறையினர் கிட்ட விவசாயிங்க புகார் சொல்ல முயற்சி செய்தா, அவங்க போன் எடுக்குறதே இல்லையாம்.. எடுத்தாலும் காது கொடுத்து கேட்குறதில்லையாம்.. மாறாக மணல் மாபியாக்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு துணை போறாங்களாம்.. மணல் கொள்ளை நடக்குறதால, நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுதாம்.. மணல் கடத்தலுக்கு துணை போகிற வருவாய்த்துறையையும், காக்கிகள் துறையையும் அழைச்சி விசாரணை நடத்தி, கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை