கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டங்களை காப்பி அடித்த மோடி: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியிருப்பதாவது: உத்தரவாத திட்டங்களால் கர்நாடக மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளது என கூறி ​​ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் அரசின் மீது பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரம் உத்தரவாதத் திட்டங்களால் நமது கருவூலம் காலியாகவில்லை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்; மாறாக, ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு வரவேண்டிய நிதிகள் குறைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை தெரிந்து கொண்டு பேசவேண்டும். இது பற்றி என்னுடன் பொது மேடையில் விவாதத்துக்கு அமித் ஷா தயாரா? எங்களின் உத்தரவாத திட்டங்களை எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது நமது உத்திரவாத திட்டங்களை மட்டுமின்றி ‘உத்தரவாதம்’ என்ற பெயரையும் திருடி அதே பெயரில் விளம்பரம் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி முதல் அமித் ஷா மற்றும் உள்ளூர் பாஜ தலைவர்கள் வரை, அவர்களின் உண்மையான எதிர்ப்பு உத்தரவாதத் திட்டங்களுக்கு அல்ல, ஆனால் இந்தத் திட்டங்களின் பயனாளிகளான ஏழைகளுக்கு எதிரானதாகும்.

பாஜவும், சங்பரிவாரும் ஏழைகளுக்கான எந்தத் திட்டங்களையும் எதிர்ப்பதுதான் வழக்கமாகும். இதுதான் வரலாறு. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிப்போம் என்று கூறியபோதும், அதே ஆர்எஸ்எஸ்-பாஜ அதை எதிர்த்தது. நிலச் சீர்திருத்தம், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதித் திட்டங்களையும் எதிர்த்தனர். பாஜவினரின் இந்த செயலுக்கு ஏழை எளிய மக்கள், மக்களவை தேர்தலில் உரிய பதிலடி கொடுக்க வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது, ​​நான் அறிமுகப்படுத்திய அன்ன பாக்யா, க்ஷீர பாக்யா, இந்திரா கேன்டீன் போன்ற ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் மீது பாஜ தலைவர்கள் சகிப்புத்தன்மையின்மையையும் பொறாமையையும் காட்டினர். அன்ன பாக்யா திட்டத்திற்கு தேவையான அரிசியை வழங்க மறுத்த ஒன்றிய அரசு, தற்போது அதே அரிசியை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. காங்கிரசின் உத்தரவாதத் திட்டங்களுக்கு எதிராகப் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னடர்கள் மீது வெறுப்பாக இருக்கிறார். கன்னட கொடிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு முயற்சி, நந்தினியை விட அமுலுக்கு ஆதரவாக சதி செய்தல் இவையெல்லாம் அமித்ஷாவின் சாதனைகள் ஆகும் என்றார்.

 

Related posts

பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு