எஸ்ஐ எனக்கூறி மிரட்டி பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 பறித்த பாஜ நிர்வாகி கைது

தொண்டாமுத்தூர்: சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி பெட்டிக்கடைக்காரரை மிரட்டி ரூ.1500 பறித்த பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி பாரதிநகர் வஉசி நகரை சேர்ந்தவர் பெருமாள் (50). எம்ஏ சோசியாலஜி பட்டதாரியான இவர் 1997ல் தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். 2010ல் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியபோது சூதாட்ட வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து பாஜவில் இணைந்த இவர் கோவை மாநகர் மாவட்ட பாஜ ராணுவப்பிரிவு துணைத் தலைவராக இருந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் பேரூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் டாஸ்மாக் கடை அருகே ெசன்றார்.

அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் தேவக்கோட்டை பருத்தியூரை சேர்ந்த வெற்றிவேல் (26) என்பவரிடம், தன்னை பேரூர் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிய பெருமாள், ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்கிறாய். உன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.1,500 தரவேண்டும்’’ எனக் கூறி மிரட்டி ரூ.1,500 பெற்றுள்ளார். மேலும் வெற்றிவேலை தனது மொபட்டின் பின்னால் ஏற்றிக்கொண்டு, உக்கடம் காவல் நிலையம் வரை அழைத்து வந்துள்ளார். காவல் நிலையம் முன்பாக வெற்றிவேலை இறக்கிவிட்ட பெருமாள் அதன்பின்னர் மாயமானார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை பெருமாள் உணர்ந்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளை தேடி வந்தனர். இந்நிலையில் பூளுவாம்பட்டி அருகே பதுங்கியிருந்த பெருமாளை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மேலும் யார், யாரிடம் போலீஸ் எனக் கூறி மோசடியாக பணம் பறித்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

தமிழகத்தின் கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கூடங்குளம்: பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை : தளவாய் சுந்தரம் விளக்கம்