செங்கை எஸ்ஐ எனக்கூறி திருடிய இளம்பெண் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ்ஐ எனக்கூறி தோழி வீட்டில் திருடிய பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடியில் உள்ள ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி (22). பிளஸ் 2 படித்து முடித்த இவர் கடந்த வாரம் தூத்துக்குடி தாய்நகரில் வசித்து வரும் தன் 10ம் வகுப்பு தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரிடம், தான் செங்கல்பட்டில் எஸ்ஐ ஆக பணியாற்றி வருவதாகவும், குற்றவாளி ஒருவரை பிடிப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்த போது தனது தலையில் லேசாக காயம் ஏற்பட்டு விட்டதாகவும் 2 நாட்கள் உன் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய தோழியும், கங்காதேவியை தங்க அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அங்கு தங்கிய கங்காதேவி, தோழி வீட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதே போல் மற்றொரு தோழியின் வீட்டிற்கும் சென்று கங்காதேவி கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழக்கம்போல் கங்காதேவி போலீஸ் சீருடையில் தூத்துக்குடி பகுதிகளில் நேற்று சுற்றித்திரிவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்துசென்ற போலீசார், கங்காதேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாரிடம் எல்லாம் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்து நேரம் மாற்றம்; திருப்போரூர் எம்எல்ஏவுக்கு மாணவர்கள் நன்றி

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்