எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்

தென்காசி: எஸ்ஐ மனைவி அருகே பேருந்து இருக்கையில் அமர்ந்த காரணத்தால் திருட்டுப் பட்டம் சுமத்தி பொய் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்ததாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிமி என்ற பெண், தனது கைக்குழந்தையுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 12ம் தேதி சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு வீடுவீடாகச் சென்று பழைய துணிகளை வாங்குவதற்காக நானும், எனது அக்காவான பவானி மற்றும் உறவினர் பெண்ணான அஞ்சலி ஆகிய மூவரும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தோம். அப்போது பேருந்து இருக்கையில் சேர்ந்தமரம் எஸ்ஐயின் மனைவி, அமர்ந்திருந்த நிலையில் அவர் அருகே எனது உறவினர் பெண்ணான அஞ்சலி அதே இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது அந்த இருக்கையில் இருந்த எஸ்ஐ மனைவி எங்களை வேறு இருக்கையில் அமருமாறு கூறினார். ஆனால், நாங்களும் மனிதர்கள்தான், நாங்களும் டிக்கெட் எடுத்து தான் பஸ்சில் பயணிக்கிறோம் எனக்கூறிய நிலையில், கோபம் அடைந்த அவர் மயிலப்பபுரம் நிறுத்தத்தில் இறங்கி சென்றார்.

பின்னர் சில கி.மீ. கடந்து நரையப்பபுரம் பகுதியில் பஸ் சென்றபோது அங்கு போலீஸ்காரர்கள் இருவருடன் வந்து மறித்த எஸ்.ஐ. மனைவி, தனது மணிபர்சை காணவில்லை எனக் கூறினார். உடனே பஸ்சின் நடத்துனர் கீழே கிடந்த பர்ஸை எடுத்து அவர் கொடுத்த நிலையில் அந்த பர்சில் சில நூறு ரூபாய் வைத்து எஸ்.ஐ. மனைவி நடத்துனரிடம் கொடுத்தார். தொடர்ந்து, அஞ்சலி மற்றும் எனது அக்கா பவானி உட்பட எங்கள் மூவரையும் போலீசார் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், நீண்ட நேரம் காக்க வைத்து எனது அக்கா பவானி மற்றும் அஞ்சலி மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எந்தவிதமான தவறும் செய்யாமலேயே பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்கள்மீது பொய் வழக்குப்பதிவு செய்த கடையம் காவல்துறையினர் மீதும் எங்கள் மீது பொய் வழக்கு கொடுத்த எஸ்.ஐ. மனைவி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்தவிதமான தவறும் செய்யாத எனது அக்கா மற்றும் உறவினர் பெண் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்