கடைகள், வணிக நிறுவனங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம்

*தொழிலாளர் துறை எச்சரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகள்,வணிக நிறுவனங்கள் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் துறையினர் பல்வேறு சட்டங்களின் கீழ் ஏதேனும் விதிமீறல்கள் உள்ளனவா என ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2011ன் கீழ் 44 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறு பரீசிலனை சான்று கட்டி வைக்காத 1 நிறுவனத்திற்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 1 நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரமும், பொட்டலப் பொருட்களில் உரிய அறிவிப்புகள் இல்லாத 3 நிறுவனகளுக்கு தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்த நடவடிக்கை எடுத்தனர்.

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948ன் கீழ் 10 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986ன் கீழ் மின்னனு மற்றும் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஷ்குமார் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மற்றும் மாவட்ட குழந்தைதொழிலாளர் தடுப்பு படையினருடன் கூட்டாய்வு மேற்கொண்டதில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே போன்று சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வின் போது முறைகேடுகள் மற்றும் தவறுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்த்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ெதாழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறியதாவது: அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.குழந்தை தொழிலாளர் கண்டறியப்பட்டால் குழந்தை மற்றும் வளரிளத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் விதிகள் 1988ன் படி அக்குழந்தை தொழிலாளர் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து அவர்கள் மீட்கப்படுவதுடன் நிறுவன உரியமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்படி சட்ட ரீதியான நடவடிக்கையில் தண்டனையாக குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அல்லது அபராதமாக ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையிலும் விதிக்கப்படலாம். மேலும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகை இரண்டினையும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படலாம். இவ்வாறு தொழிலாளர் உதவி ஆணையர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி