பாஜ ஆளும் மபியில் பட்டபகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடு ரோட்டில் பெண் பலாத்காரம்: தடுக்க முயற்சிக்காமல் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்ட பொதுமக்கள்

உஜ்ஜைனி: மபி மாநிலத்தில் உள்ள புனித நகரான உஜ்ஜையினியில் நடு ரோட்டில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மபி மாநிலம், உஜ்ஜைனி, அகர்நாக்கா பகுதியில் ஒரு பெண் குப்பைகளை பொறுக்கி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அந்த நபர் பெண்ணை மது குடிக்க வைத்துள்ளார். பின்னர் மது போதையில் அந்த அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். கோய்லா பாட்டக் என்ற முக்கியமான சாலையில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் கொடுமை என்னவெனில் நடுரோட்டில் பெண் பலாத்காரம் செய்யப்படுவதை யாரும் தடுக்க முன்வரவில்லை. ஆனால் சில விஷமிகள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். குறிப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கூறிய தகவல்களை வைத்து லோகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி மாநகர எஸ்பி ஓம் பிரகாஷ் மிஸ்ரா,‘‘சம்பவத்துக்கு பின்னர் லோகேஷ் தப்பி ஓடிவிட்டார். அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து லோகேஷ் கைது செய்யப்பட்டார்.

பலாத்கார சம்பவத்தை 3 அல்லது 4 பேர் வீடியோ எடுத்து இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதை தடுக்காமல் வீடியோ எடுத்த அந்த நபர்களை தேடி வருகிறோம்’’ என்றார். புனித நகருக்கு இழுக்கு மபி மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. உஜ்ஜைனியில் பட்டபகலில் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜ அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மபி காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: புனித நகராம் உஜ்ஜைனியில் மீண்டும் ஒரு அறுவறுப்பான சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்காக ஆட்சியில் இருப்பவர்கள் வெட்கம் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மபி காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்த சம்பவம் உஜ்ஜைனியின் பெருமைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மபியில் தற்போது பலாத்கார சம்பவங்கள் பட்டப்பகலிலேயே நடக்கின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். அதுவும் முதல்வரின் சொந்த ஊரிலேயே நடந்துள்ளது என்றால் மாநிலத்தின் இதர பகுதிகளின் நிலைமையை ஒருவர் சிந்தித்து பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்