டிட்கோ, சிப்காட் நிறுவனங்களின் பங்கு ஈவுத்தொகை ரூ.307.22 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய 2022-23ம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகை மொத்தம் ரூ.307.22 கோடி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ): தனியார் தொழில் முனைவோருடன் இணைந்து, நடுத்தர மற்றும் பெரிய அளவிளான தொழில்களை மேம்படுத்தவும், கூட்டு முயற்சிகள் வழியாக முதலீட்டை ஈர்த்து, மாநிலத்தை உலகளாவிய தொழில் மையமாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது.

இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு, 2022-23ம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக ரூ.204 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரத்து 409 காசோலையை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்): தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மாநிலத்தில் பரவலாக தொழில் பூங்காக்களை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு, 2022-23ம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக ரூ.75 கோடியே 81 லட்சத்து 23 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC): தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசுக்கு 2022-23ம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக ரூ. 15 கோடியே 17 லட்சத்து 61 ஆயிரத்து 400 காசோலையை வழங்கியுள்ளது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்): தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு 2022-23ம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக 12 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கியுள்ளது.இந்நிகழ்ச்சியின்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் அருண் ராய், கலந்து கொண்டனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை