Monday, September 30, 2024
Home » சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி

சக்தி தத்துவம்-அபிராமி அந்தாதி

by Lavanya

தமக்கு அன்னையும் ஆயினள்

``உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்‌
சடையாளை வஞ்சகர்‌நெஞ்சடையாளைத்‌ தயங்கும் நுண்ணூல்‌
இடையாளை, எங்கள்‌பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்‌
படையாளை உங்களையும்‌படையாவண்ணம்‌பார்த்திருமே’’
– என்பத்தி நான்காவது அந்தாதி

‘`அந்தமாக’’

மனித இலக்கு என்னவாக இருக்க வேண்டும் அதை எப்படி பெற வேண்டும் என்பதை இந்த பாடலில் அழகாக வெளிப்படுத்துகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் பெற்று வாழ்வதே ஒரு முழுமையான வாழ்வு அத்தகைய வாழ்வானது உடலுக்கு ஆரோக்யத்தையும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியையும், அறிவுக்கு தெளிவையும், ஆன்மாவிற்கு வீடு பேற்றையும் தரவேண்டும் என்கிறார். இப்பாடலை, படிப்பதன் மூலம் அதை அடைய முயல்வோம்.
“அந்தாதி பொருட்ச்சொல் வரிசை”

*உடையாளை
*ஒல்கு செம்பட்டு உடையாளை
*ஒளிர்மதிசெஞ் சடையாளை
*வஞ்சகர் நெஞ்சடையாளை
*தயங்கும் நுண்ணூல் இடையாளை
*எங்கள் பெம்மான் இடையாளை
*இங்கு என்னை இனிப் படையாளை
*உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“உடையாளை’’

என்கிற வார்தையால் சதாசிவ குடும்பினி என்று சிவபெருமானை மணந்து புதல்வர்களுடன் திகழும் அந்தந்த கோயில்களில் உடனாய என்று சிவபெருமானுடன் இணைத்து கூறப்படுகின்ற இறைவியையே “உடையாளை’’ என்கின்றனர். திருக்கடவூரிலேயே பாலாம்பிகை, போக சக்தி, சித்சக்தி போன்ற பல சக்திகள் இருந்த போதும் அச்சக்திகளில் இருந்து தனித்து சிறப்புடையவள் என்பதை காட்டவே அபிராமியை ‘`உடையாளை’’ என்கிறார். தீட்சை செய்து கொண்டு வீட்டிலே சிவபூஜை செய்பவர்கள், அந்த ஸ்வாமியை உடையவர் என்று குறிப்பிடுவர். அந்த ஸ்வாமியின் உடன் உறை மனோன்மணியை ‘`உடையாள்’’ என்று குறிப்பிடுவர் சிலர். உமையம்மைக்கு பதிலாக ஸ்ரீசக்கரத்தை வைத்து வழிபடுவர். அந்த ஸ்ரீசக்கரத்தையும் ‘`உடையாள்’’ என்று சூட்டுகிறார். இச்சொல்லால் கோயில்களில் உள்ள ஸ்ரீசக்கரத்தை என்று குறிப்பிடும் வழக்கமில்லை. தான் கோயிலில் வணங்கிய அபிராமியையும், வீட்டில் வணங்கிய ஸ்ரீசக்கரத்தையும் ஒரே சொல்லால் குறிப்பிடவே இங்கு “உடையாளை’’ என்கிறார்.

“ஒல்கு செம்பட்டு உடையாளை’’

சிற்ப சாத்திரமானது காளி வடிவத்தை நடன கோலத்தில் அமைக்கும் போது பரதநாட்டியம் ஆடுபவர்கள் ஆடை அணிவது போல பட்டை அணிந்தவளாக வடிவமைக்க வேண்டும் என்கிறது. செவ்வண்ண நிறத்தில் முழங்கால் வரை அதிகமான மடிப்புகளுடன் அமைந்த சுருங்கிய செவ்வண்ண பட்டாடையை தன் உடைமையாகவும் தனித்த சிறப்பு அடையாளமாகவும் கொண்டவள் என்ற பொருளில் ‘`ஒல்கு செம்பட்டு உடையாளை’’ என்கிறார்.

மேலும், நிறங்களையே அடையாளமாக கொண்ட பச்சைக்காளி, பவளக்காளி, செங்காளி, கருங்காளி, வெங்காளி, அங்காளி, கங்காளி, பொங்காளி என்று ஆடைகளையும் அதன் நிறத்தையும் குறிப்பிட்டு காளியை கூறுவது வழக்கமாகும். தமிழகத்தில் மட்டுமே ஆடல் கண்ட அழகி என்று உமையம்மையை காளியாக வழிபடும் வழக்கம் உள்ளது. மற்ற பகுதியில் காளியை தாயே என்று குறிப்பிடுவர். அது பார்வதியையே குறிக்கும். வண்ணத்தை குறிப்பிட்டு நாட்டிய குலத்தில் தோன்றிய மகளிரை குறிப்பிட்டால் அது தமிழகத்து காளியையும் நிறமற்ற காளியை குறிப்பிட்டால் அது வடதேசத்தில் வழிபடப்படும் காளியை குறிக்கும்.

அதையே தட்சணகாளி என்று வடதேசத்தில் உள்ளவர் குறிப்பிடுவர். தெற்கத்திய காளியை குறிப்பிடவே அபிராமிபட்டர் ‘`மதங்கர் குல பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’’ (70) என்கிறார். இந்த பாடலை பொறுத்தவரை ‘`ஒல்கு செம்பட்டு உடையாளை’’ என்பதனால் செங்காளியையே குறிப்பிடுகின்றாள். இவள் சிவ அபவாதம் செய்பவர்களை தண்டிப்பதற்கு தோன்றியவள். கோயில்களில் நடக்கும் கணக்கு வழக்கு குளறுபடிகளை சரி செய்வதற்கு செங்காளி சத்தியமாய் என்று குறிப்பிட்டு சோதியை ஏற்றி உண்மையை நிறுவ சத்தியம் செய்ய சொல்வர். அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் காளி அவர்களை தண்டித்துவிடுவாள். இந்த காளியையே பட்டர் ‘`ஒல்கு செம்பட்டு உடையாளை’’ என்கிறார்.

“ஒளிர்மதிசெஞ் சடையாளை’’

இவள் சடையில் அணிந்திருப்பது அஷ்டமி திதியில் உள்ள பாதி வளர்த்த வளர்பிறை (சுக்லபட்ச) சந்திரனாகும். இந்த சந்திரனை தரித்தவள் மாதங்கி எனப்படும் காளியாவாள். இவள் கைகளில் உள்ள மகதி என்ற வீணை ஆயிரம் நரம்புகள் கொண்டது, உலகியல் சார்ந்த அனைத்து கலைகளையும் கற்றவர்களே, அதிலும் முதன்மை யானவர்களே இவ்வீணையை மீட்ட முடியும்.

சடை என்பது சிற்ப சாத்திரத்தை பொறுத்தவரை பிரம்மச்சர்ய என்னும் மாணவப் பருவத்தை கடந்து கிருஹஸ்த என்ற இல்லறப் பருவத்தையும் கடந்து, ஐம்பது வயது முதல் எழுபத்தைந்து வயதுடைய கணவன் மனைவி தன் கடமைகள் அத்தனையையும் முடித்து சிறந்தது பயிற்றல் என்ற ஆத்ம விசாரமான கருமங்கள் என்னும் செயல்பாடுகள் அற்று மனதிற்குள்ளேயே எண்ணங்களாலேயே மானச பூஜை, தியானம் முதலியன செய்யுமவர்கள் கூந்தலை ஜடையாக தரிப்பர். அந்த வயதை உடைய தோற்றத்தில் உமையம்மை காட்சி தந்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கிறாள். இவளையே ‘`ஒளிர்மதிசெஞ் சடையாளை’’ என்கிறார்.

“வஞ்சகர் நெஞ்சடையாளை’’

ஸ்மசானத்தில் வாழும் ஆன்மாக்களின் நலன் பொருட்டு முக்தியளிக்கவல்ல காளியை குறிப்பிடுகிறார். வஞ்சனை என்ற வார்த்தையால் மனதிற்குள்ளே ஒரு விஷயத்தை மறைப்பது என்ற பொருளில் இந்த இடத்தில் பயன்படுத்துகிறார்.ஆன்மாவை அறிய விடாது உலகத்தையும், உடலையும் வெளிப்படுத்தி காட்டும் புலன்களின் செயலையே வஞ்சனை என்கிறார் பட்டர். இந்த வஞ்சனைகளை போக்கி ஆன்ம ஞானத்தை அருளக்கூடிய காளியையே ‘`வஞ்சகர் நெஞ்சடையாளை’’ என்கிறார். இவள் புலன் அடக்கம் பெற்று ஆன்ம ஞானத்தைப்பெற சன்யாசிகளால் வணங்கப்படுகிறாள்.

வடிவமற்றவளாக, அடையாளமற்றவளாக சவத்தின் மீது அமர்ந்து தியானம் செய்வர் என்கிறது தாந்ரீகசாத்திரம். இந்த வழக்கம் தமிழகத்தில் கிடையாது என்ற போதிலும் ஒரு காலத்தில் இருந்து அழிந்திருக்கிறது. தற்போது அதன் சுவடாகவே மயானக்கொள்ளை என்ற பூசனை நடைபெறுகிறது. இந்த காளியையே பட்டர் ‘`வஞ்சகர் நெஞ்சடையாளை’’ என்கிறார்.

“தயங்கு நுண்ணூல் இடையாளை’’

ஸ்ரீ சக்கரத்தில் திரைலோக்கிய மோகினி என்ற காவல் தேவதையாக பூபுரத்திலுள்ள மூன்று கோடுகளிலும் எழுந்தருள்பவள் இவள். இடை இருக்கிறதா என்று சந்தேகிக்கும் அளவிற்கு ஒல்லியாக இருப்பதனாலேயே தயங்குநுண்ணூல் இடையாளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். இவளுக்கு தந்திர சாத்திரமானது உருவங்களை அமைக்காமல் மனதிற்குள்ளேயே உருவமாக தியானித்து வழிபடசொல்கிறது. அதன் விளக்கத்தை இங்கே காண்போம்.

தாமரை மலரில் வீற்றிருப்பவள், கரும்புவில் மலர்களாகிற அம்புகள், அங்குசம், இரண்டு தாமரை மலர்கள், ருத்திராட்சமாலை அல்லது தாமரை மணிமாலை, வித்யை [ஞான முத்திரை] அல்லது சுவடி, பாசம் [கயிறு] இவற்றை கைகளால் தரித்திருப்பவள். மெல்லிய இடையையுடையவள் மூன்று கண்களுள்ளவள் செந்நிறமானவள், சிவப்பான சந்தனம், ஆடைகள், பூக்கள் இவற்றை அணிந்தவள். அப்போது மலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்தில் அருள் ததும்பியவாறு காட்சியளிப்பவள். மூவுலங்களையும், குழப்பமடையச் செய்யும் வனப்பு உள்ளவள். முனிவர்களாலும் தேவர்களாலும் துதிக்கப்பட்டவள். இவ்வாறாகவுள்ள உலகப் பிரசித்தி பெற்ற இந்த தேவதை வணங்குவதால் புகழையும் செல்வத்தையும் அடைவர். இவளையே ‘`தயங்குநுண்ணூல் இடையாளை’’ என்கிறார்.

“எங்கள் பெம்மான் இடையாளை”

சோமாஸ்கந்தர் என்ற திருவுருவில் இடது புறத்தில் அமர்ந்திருக்கும் உமையம்மையை எங்கள்பெம்மான் இடையாளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இந்த அம்பாளுக்கு உமா என்பது பெயர். இந்த உமையம்மையோடு கூடிய சிவனுக்கு அவன் [ச:] என்பது பெயர். இருவருக்கும் இடையே இருக்கும் ஆன்ம வடிவிற்கு ஸ்கந்தர் என்று பெயர். இந்த உமையம்மை தனித்து இருக்கமாட்டாள் எப்பொழுதும், சிவபெருமானுடனும், ஸ்கந்தருடனும் இணைந்தே இருப்பாள். இவளை வணங்கினால் புத்திர பேறு கிட்டும். இந்த உமையம்மையையே ‘`எங்கள் பெம்மான் இடையாளை’’ என்கிறார்.

“இங்கு என்னை இனிப் படையாளை’’

சாக்த தந்திரங்களில் பேச்சியம்மன் என்ற கரிய ஆடை உடுத்தும் உமையம்மையை குறிப்பிடுகிறது. இவள் பிறவாமையாகிற முத்தியை அருள வல்லவள். இரு முரண்பட்ட குணங்களை ஒன்றாக கொண்டவள். இவள் சைவம், அசைவம் என்ற இருவகையாலும் வழிபடத்தக்கவள். அசைவமாக, கருப்பு வண்ண உடை சாற்றி காட்டேரி என்ற சக்தியுடன் இணைத்து வழிபட்டால் உடல் சார்ந்த நன்மையை வழங்குவாள்.

காட்டேரியை நீக்கி சைவ முறையில் பேச்சியம்மனை மட்டும் தனித்து வழிபட்டால் முத்தியையும் தருபவள். இந்த வழிபாட்டில் உச்சரிக்கும் மந்திரமும் இரண்டாக இருக்கும். உருவமும் இரண்டாக இருக்கும். இவளை தனித்து அமைத்து வழிபடுவது வழக்கத்திலில்லை பெரும்பாலும் காட்டேரியுடன் சேர்த்தே வணங்குவர். இவள் ஐயனார் கோயிலில் பரிவார தேவதையாக வணங்கப்படும் இவள் குலத்தை காப்பவளாக திகழ்கிறாள். இந்த மந்திர பிரயோக முறையை நன்கு அறிந்த அபிராமி பட்டர் பேச்சியம்மனை வழிபட்டு முத்தியை வேண்டுகிறார். பேச்சியம்மனில் இருவகை உள்ளது.

காதில் சவத்தை தோடாக அணிந்தது, கையில் குழந்தை தரித்தது என்று ஒரு வகையும், மருந்துவச்சி போன்ற தோற்றத்தையும், பஞ்சடைந்த முதிய மார்பையும், முதிய கிழவியான வடிவத்தையும், தன் மடியில் ஒரு நிறைமாத கர்ப்பிணியை அழிப்பது போலும், அவள் மடியிலிருந்து குழந்தையை வெளிப்படுத்துவது போலவும், கால்களால் ஓர் அரக்கனை மிதித்து கொள்வது போலவும் வடிவமைத்திருப்பர். இவள் மடியில் உள்ள கர்ப்பிணிப்பெண் பிறவியையும், காலிலுள்ள அரக்கனின் வடிவம் மரணத்தையும் குறிக்கும். இவர்கள் இருவரையும் அழிப்பதால் முத்தியைத் தரவல்லவள்.

சிவப்பெருமானையே மகனாகப் பெற வேண்டும் என்று அசுர குல பெண் வேண்ட, அப்படி பிறந்தால் அக்குலம் அழியாது என தேவர்கள் அஞ்ச மகா விஷ்ணுவானவர் மருத்துவச்சி கோலம் பூண்டு பிரசவம் பார்க்க வருவது போல் வந்துஅவ்வரசனையும் அரக்கியையும் கொன்று சிவ குழந்தையை தன் காதில் தரித்தாள் இதையே ‘`அவர் தமக்கு அன்னையும் ஆயினள்’’ (44) என்று அபிராமி பட்டர் குறிப்பிடுவதோடு ‘`மரணம் பிறவி இரண்டும் எய்தார்’’ (51) என்று அவளை வணங்குவதால் கிடைக்கும் பயனை அறிவித்து அந்த பயனை தான் அடைந்ததை ‘`இங்கு என்னை இனிப் படையாளை’’ என்கிறார்.

“உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே’’

அபிராமியை வணங்கும் அனைவரையும் பார்த்து “உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே’’ என்பதனால் பிறவி பிணியை நீக்கி விடுங்கள் என்று வலியுறுத்து கிறார். வாழும்போதே வழிபாடு செய்து, நன்கு வாழ்வதற்கும், ஆயுள் நீட்டிப்பதற்கும் பிரார்த்தித்து அதன் வழியே அனைத்து கர்மாக்களையும் அனுபவித்துத் தீர்த்து, ஆசை நீங்கி, பற்றற்று ஞானம் பெற்று என்ற வார்த்தைகளை யெல்லாம் இணைத்து ‘`உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே’’ என்கிறார்.

‘`அந்தமாக’’‘`

உடையாளை’’ என்பதனால் அறம் செய்யும் அபிராமியையும்;
‘`ஒல்கு செம்பட்டு உடையாளை’’ என்பதனால் அறத்தின் வழி பெறப்படும் ஆனந்தத்தை தரும் நல்வாழ்வையும் அளிக்கும் காளியையும்,
‘`ஒளிர்மதி செஞ்சடையாளை’’ என்பதனால் மாதங்கி என்ற தேவதையை வழிபட்டு ஆத்ம ஞானத்தையும்;
‘`தயங்குநுண்ணூல் இடையாளை’’ என்பதால் திரைலோக்ய மோகினி என்ற உலகியல் இன்பம் அனைத்தையும், பெருவதற்கு வழி சொல்கிறார்;
‘`எங்கள்பெம்மான் இடையாளை’’ என்பதனால் நன்மக்கள் பேற்றிற்கு வழி சொல்லி;

‘`வஞ்சகர் நெஞ்சடையாளை’’ என்பதனால் உபாசனை தடையை நீக்கி ஞானம் பெற வழிவகுத்து;
‘`இங்கு என்னை இனி படையாளை’’ என்பதனால் தன் மோட்சத்தை உறுதி செய்து கொண்டு;

‘`உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே’’ என்பதனால்தான் இறை அருளை பெற்றபின் தான் பிறருக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்ற கருத்தையும் மறைமுகமாகவும் நமக்கு சூட்டி வையத்துள் நீண்ட ஆயுளுடன் விரும்பிய அனைத்தையும் பெற்று வாழ்ந்து சலித்து ஆத்ம ஞானம் பெற்று உய்வு பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

You may also like

Leave a Comment

three + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi