மனிதாபிமான செயல், மகத்தான சாதனை!!

ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராக எட்டுச் சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதற்குத் தயார் என அறிவிக்கப்பட்டது.ஓட்டம் தொடங்குவதற்கான விசில் அடிக்கப்பட்டதும் எட்டுச் சிறுமிகளும் ஓட ஆரம்பித்தார்கள். 50 அடி தூரம் ஓடியதும் ஒரு சிறுமி திடீரென கீழே விழுந்து விட்டாள்.முன்னால் ஓடியவர்களுக்குப் பின்னே விழுந்தவளின் அழுகைச் சத்தம் கேட்கிறது.கீழே விழுந்தவள் வலியால் அழுகின்றாள்.முன்னோக்கி ஓடிய 7 சிறுமிகளும் மீண்டும் பின்னோக்கி வந்து நிற்கிறார்கள்.அவர்களில் ஒருத்தி கீழே விழுந்தவளைத் தூக்குகிறாள்.அவளது அழுகையைத் துடைத்து விடுகின்றாள்.அவரது கன்னத்தில் அன்போடு முத்தம் கொடுக்கின்றாள்.மற்ற ஒருவர் அவரை அன்போடு தட்டிக் கொடுக்கின்றார்.அந்த நேரத்தில் அழுது கொண்டு இருந்தவளின் அழுகையின் வேகம் குறைகின்றது.அவளது வலியும் குறைந்ததாக உணர்கிறார்.போட்டியை நடத்துபவர்களும், சுற்றி இருந்த மக்களும் அமைதியாக அங்கே மைதானத்தில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அந்த எட்டுச் சிறுமிகளும் ஒருவர் ஒருவர் கையை பிடித்துக் கொண்டார்கள்.மெதுவாக நடக்கிறார்கள்.காரணம் கீழே விழுந்தவளால் ஓட முடியாது. வேகமாக நடக்கவும் முடியாது. மெதுவாக நடந்த எட்டு பேரும் அடுத்த இலக்கினை, அதாவது ஓடி அடைய வேண்டிய தூரத்தை ஒன்றாக அடைந்தார்கள்.போட்டிக்கு வந்திருந்த நடுவர்களுக்கு ஆச்சரியம்! போட்டியை நடத்தியவர்களுக்கும் இதுபுதுமையாக இருந்தது.அங்கே பார்வையாளராக அமர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் மிக பலமாக கரவொலி எழுப்பி இந்த எட்டுப் பேரையும் வாழ்த்தினார்கள்.அந்த எட்டுச் சிறுமிகளுமே பரிசு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உண்மையிலே நடைபெற்ற சம்பவம். இங்கு போட்டியில் கலந்து கொண்ட எட்டுச் சிறுமிகளும் மனநலம் பாதிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய சிறுமிகள்.ஒரு சிறுமி பாதிக்கப்பட்டதும் அவளைத் தேற்றியதோடு,அவளும் இங்கே பரிசைப் பெற வேண்டும் என்று அவர்களாகவே முடிவெடுத்து, ஒன்றாக நடத்திச் சென்று இலக்கினை அடைந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியை நடத்தியவர்கள் தேசிய மனநல மையத்தைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கும்,அங்கே பார்வையாளராக வந்த செய்தியாளருக்கும்,செய்தியைக் கேட்ட பலருக்கும் இந்த மனநலம் குன்றிய சிறுமிகளின் செயல் மனிதாபிமானத்தைப் பறைசாற்றியது.இது போன்ற மனிதாபிமான மகத்தான செயல்களை இந்தஉலகத்தில் ஒருசிலர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் சிட்னி, அடிக்கடி மிக்சிகன் எரிக்குச் செல்வார்.ஏரிக்கரையில் தட்டையான, ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கற்கள் அவரை ஈர்க்கும். எட்டு வயதிலேயே கற்களில் துளையிட்டு, ஒரு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியும் மாலையாக மாற்றினார்.சிட்னியின் கல் மாலைகளை அவர் குடும்பத்தினரும், உறவினர்களும் அணிந்து கொண்டனர்.10 வயதில் சிட்னிக்கு உடல்நலம் குன்றியது. ரத்தம் தொடர்பான எல்.சி. ஹெச்( langerhans cell histiocytosis)இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளை அணுக்கள் நோய்களை எதிர்த்து நிற்கக் கூடியவை. ஆனால்,அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் சில இடங்களில் சேரும்போது நோயாக மாறிவிடுகின்றன. இதனால் தோளில் கடுமையான அரிப்பு, எலும்பு களில் ஓட்டை, உறுப்புகளில் பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும்.2 லட்சம் குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது.இதற்கு காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.அதிகம் செலவு பிடிக்கக்கூடிய மருத்துவம் பார்க்கக் கூடிய சூழல் ஏற்படும்.

3 வாரங்களில் ஸ்கேன்,பயாப்சி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன. பள்ளிக்கு செல்ல முடியவில்லை,நான்கு அறுவை சிகிச்சைகள், கீமோதெரபி என்று ஆறு மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தது. தொடர்ந்து மருந்து சாப்பிட்டேன்.கொடூரமான நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டேன்.அதற்குப் பிறகே நோயைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் என்கிறார் சிட்னி.உடனே என்னைப் போல பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அன்று எனக்குத் தெரிந்த ஒரே தொழில் கல்மாலை செய்வதுதான்.அதையே அதிக அளவில் செய்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விற்பனை செய்துவந்தேன். மிகச் சிறிய தொழிலாக இருந்தாலும் இதில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தேன் என்கிறார் சிட்னி.

சின்னஞ்சிறு பெண் நல்ல காரியத்துக்காக கல்மாலைகளை விற்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் பரவியது. மக்கள் ஆர்வத்துடன் மாலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர். சிட்ராக்ஸ் என்ற பெயரில் விற்கப்பட்ட மாலைகள் ராக்ஸ் பவுண்டேஷனாக மாற்றம் அடைந்தது.கற்களில் ஒரு துளை போட்டு,கயிற்றில் முடிச்சு போட்டால் மாலை தயார்.முடிச்சு போடுவதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாலையும் என் கைகளால் உருவாகிறது. எல்லோரையும் இந்தக் கல் மாலை ஈர்க்காது.ஆனால் நல்ல காரியத்துக்காக என்பதால் ஆர்வத்துடன் வாங்கிக்கொள்கிறார்கள். இதற்காகச் சிறப்பு முகாம்கள் கூட நடத்துகிறோம். தன்னார்வலர்கள் கற்கள் சேமிப்பிலும், மாலை செய்வதிலும் உதவுகிறார்கள். எட்டே ஆண்டுகளில் 2 கோடி 80 லட்சம் ரூபாய் சேமித்துவிட்டோம். இந்த நிதியில் இருந்து எத்தனையோ குழந்தைகள் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் சிட்னி. தற்போது நாலு கோடிக்கும் அதிகமான நிதியை திரட்டி பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக வழங்கி இருக்கிறது சிட்னி பவுண்டேஷன்.

மாணவருக்கான ஒரு அமைப்பை ஆரம்பித்து நடத்திவருகிறார். சிக்காகோவில் இருக்கும் லூரி குழந்தைகள் மருத்துவமனையில் ஆலோசனைக் குழுவில் இருக்கும் சிட்னி விடுமுறை நாட்களில் மருத்துவமனையில் சேவை செய்து வருகிறார். எனக்கு அன்று யாரும் உதவவில்லை என்றால் இன்று நான் இந்த உலகத்தில் இருந்திருக்கவே மாட்டேன்.அதை யோசித்தபோது உருவானதுதான் நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டம். அதுவும் என் கைகளால் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ‘சிட் ராக்ஸ் பவுண்டேஷன்’ இவ்வளவு பெரிய அளவிற்கு வளர்ந்ததில் மகிழ்ச்சி. எத்தனையோ ஆயிரம் நல்ல உள்ளங்களால்தான் இது சாத்தியமாயிருக்கிறது. எல்.சி.ஹெச் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நிதி திரட்டுவதை நிறுத்தப்போவதும் இல்லை,பின் வாங்கப் போவதும் இல்லை என்று உறுதியாக இருக்கிறார் சிட்னி மார்ட்டின். தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மனஉறுதியுடன் மீண்டு தன்னைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மனிதாபிமானமிக்க பணியை செய்து மகத்தான சாதனையைப் புரிந்து இருக்கிறார் சாதனை மங்கை சிட்னி என்பதில் ஐயமில்லை.

 

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு