பாலியல் புகாரை விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் குழு பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்

* தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வேண்டுகோள், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு

சென்னை: மலையாளப் படவுலகில் ஹேமா கமிட்டி தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் படவுலகில் எடுத்த முன்னெச்சரிக்கை தொடர்பான விவாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க, சென்னையில் நேற்று காலை 10 மணியளவில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்திற்கு சங்க தலைவர் நடிகர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி எஸ்.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருக்கும் மேடை நாடக கலைஞர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.சமீபகாலமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசர் தெரிவித்தார். நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், திரைப்பட தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், நடிகை சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அத்துடன் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும் வழங்கப்பட்டது. தவிர, மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, ‘பசி’ சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோருக்கு நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் அவரது முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போதிய நிதியின்றி நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாளர் கார்த்தி கூறுகையில், ‘புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்ட நடத்தப்படும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து மேடை நாடகத்தில் நடிக்க சம்மதித்துள்ளனர்’ என்றார்.

பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து, அதை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை அளிக்க சிறப்பு தொலைபேசி எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று, ரோகிணி தலைமையிலான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால், சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்