பாலியல் தொழிலுக்கு போலீஸ் தொந்தரவு செய்வதாக வழக்கு: நீதிபதி கடும் கண்டனம் ; வக்கீலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மதுரை: பாலியல் தொழிலுக்கு போலீசார் தொந்தரவு செய்வதாக மனு செய்த வழக்கறிஞருக்கு ஐகோர்ட் கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் நாகர்கோவில் பகுதியில் மனமகிழ் மன்றம் மூலம் மசாஜ் மற்றும் பாலியல் சேவைகளை வழங்கி வருகிறேன். காவல்துறையினர் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து தொல்லை செய்கின்றனர். இதனால் எனது தொழில் பாதிக்கிறது.

எனவே, காவல்துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, அதிர்ச்சியடைந்த நிலையில், ‘‘ஒரு வழக்கறிஞர் பாலியல் தொழில் செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது மிகுந்த வேதனையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இவரது கல்வித்தகுதி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

இதுபோன்ற மனுக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்வதற்காக போலீசார் சிறுமி ஒருவரை தனது இடத்திற்கு அனுப்பி பொய் புகார் பெற்று தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் தனது மசாஜ் கிளப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மனுதாரர் தன்னை வழக்கறிஞராக அடையாளப்படுத்தி, பாலியல் மையம் நடத்த பாதுகாப்பு கோருவது இந்த நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

சிறுமி, 10ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அவரது வறுமை நிலையை மனுதாரர் பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். வழக்கறிஞர் எனும் பெயரில் ஒருவர் இதுபோன்ற விஷயத்தை செய்தது மிகவும் துரதிஷ்டவசமானது. கன்னியாகுமரி மாவட்டம் நூறு சதவிகித எழுத்தறிவு பெற்ற மாவட்டம். ஆனால் சில மோசமான சம்பவங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். சமூகத்தில் வழக்கறிஞர்களின் நற்பெயர் குறைந்து வருவதை பார் கவுன்சில் உணரும் தருணம் இது. இனிவரும் காலங்களிலாவது பதிவு செய்யும் நபர்களின் பின்புலத்தையும், தரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் பதிவு, கல்வி தகுதியை பார் கவுன்சில் உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் இவர் மீது பதியப்பட்ட வழக்கை விரைவாக இறுதி அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் 5 மாதங்களில் விசாரணையை கீழமை நீதிமன்றம் முடிக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை, 4 வாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் செலுத்த வேண்டும்’’ என உத்தரவில் கூறியுள்ளார்.

* ஒரு வழக்கறிஞர் பாலியல் தொழில் செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது மிகுந்த வேதனையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இவரது கல்வித்தகுதி குறித்து ஆராய வேண்டியுள்ளது.

Related posts

ஆகஸ்ட் 06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

யூடியூப் சேனல்களை முறைப்படுத்த நடைமுறைகள் வகுக்க கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 நாட்களில் 25,000 பேர் விண்ணப்பம்: மருத்துவ கல்வி மாணவர் தேர்வு குழு தகவல்