மாநகராாட்சி 23, 24, 30வது வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் இல்லை: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: மாதவரம் மண்டலம், புழல் 30வது வார்டு லட்சுமிபுரம், ரெட்டேரி ஜோதி நகரில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக அளவீடு பணிகள் மட்டுமே நடந்தது. பின்னர் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதை தொடர்ந்து ரெட்டேரி, ஜோதி நகரில் பாதாள சாக்கடை திட்டமோ, மழைநீர் கால்வாய் பணிகளோ இதுவரை நடைபெறவில்லை. இதனால் மழைக் காலங்களின்போது இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதால் உருவாகும் கொசு தொல்லையால் பல்வேறு நோய்தொற்று பாதிப்புகளில் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், புனித அந்தோணியார் நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அங்கு குழாய்கள் மூலம் குடிநீரிலும் கலந்து விடுகிறது. எனவே, 23, 24 மற்றும் 30வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் திட்டப் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்