மணலியில் பாதாள சாக்கடை பணி; சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்: மாற்றுப்பாதை இல்லாததால் வாகன ஓட்டிகள் தவிப்பு

திருவொற்றியூர்: மணலியில் பாதாள சாக்கடை பணிக்காக 16 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மாற்றுப்பாதையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மணலி மண்டல அலுவலகம் எதிரே பாதாள சாக்கடை ராட்சத குழாய் பதிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சாலையில் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மறுநாள் காலை வரை இந்த பணிகள் தொடர்ந்து நடந்ததால் ஆட்டோ, மோட்டார் பைக், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

மாற்று பாதையில் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் பணி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாய் மீதும், சேறும் சகதியுமாக உள்ள தெருவிலும் பொதுமக்கள் நடந்து சென்றதால் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். தொடர்ந்து, நேற்று மதியம் சுமார் 12 மணிக்கு பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் மணல் போட்டு மூடப்பட்டன. ஆனாலும் முறையாக கான்கிரீட் போடாததால் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தின் மீது வாகனங்கள் சென்ற போது மணலில் புதைந்து நின்றன. இதனால் பணிகள் முடிந்தும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமார் 16 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு
பொதுமக்கள் கூறுகையில், ‘‘வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலையில் குழாய் பதிக்கும் பணியை செய்யும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் மாற்றுப் பாதையை உருவாக்கி விட்டு செய்ய வேண்டும். ஆனால் மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் அதுபோன்ற மாற்று வழி ஏதும் செய்யாமல் அவசரகதியில் பணிகளை ெதாடங்கி அதை குறித்த நேரத்தில் முடிக்காமல் காலம் கடத்துகின்றனர். இதை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளும் கண்டும்காணாமல் உள்ளனர். இவ்வாறு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சரியாக திட்டமிட்டு பாதாள சாக்கடை கால்வாய் போன்ற பணிகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றனர்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி