கழிவு நீர் அகற்றும் பணியில் இறந்தால் ரூ. 30 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கழிவு நீர் அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் இறந்தால் ரூ. 30லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தொழில்நுட்பங்கள் எந்தளவு வளர்ச்சி அடைந்தாலும் சாக்கடை மற்றும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை இன்று வரையில் இருந்து வருகிறது. குறிப்பாக பாதாள சாக்கடைகளில் இறங்கி வேலை செய்யும் போது விஷ வாய்வு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது வாடிக்கையாக உள்ளது. தரவுகளின் படி, இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் கழிவுநீர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்தர் பட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், ‘‘தற்போது உள்ள தொழில்நுட்ப காலத்தில் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். கழிவு நீரை அகற்றும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நாங்கள் 14 வகையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். அதில் முக்கியமாக கழிவு நீர் அகற்றும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் குறைந்தது நபருக்கு ரூ. 30 லட்சமும், காயத்தால் உடல் உறுப்பு பாதிப்பு ஏற்பட்டால் ரூ. 20 லட்சமும், இதர பாதிப்புகளுக்கு ரூ. 10 லட்சமும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டும். மேலும் மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலையை ஒழிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் ’’ என உத்தரவிட்டார்.

Related posts

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை