ஏழாயிரம்பண்ணை அருகே ஏராளமான முதுமக்கள் தாழிகள்: அகழாய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை அருகே முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. இதனால் இப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் உள்ள வயல்களில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக புதையுண்டு கிடக்கின்றன. விவசாயப் பணிகள் போது, புதையுண்ட முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. இது குறித்து தகவலறிந்து, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

ஆற்றங்கரை ஓரங்களில் நாகரிக வளர்ச்சி ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவை அகழாய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மதுரை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் போது பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளும் விதமாக பெரும் கட்டிடத் தொகுதிகள், நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என புதைந்து கிடந்த வரலாற்றின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வில் பல வண்ணங்களினால் பாசிகள், சுடுமணலால் ஆன வட்டச் சில்லு, சங்கு வளையல்கள், சங்குகளை அறுக்க பயன்படும் பொருள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தாயக்கட்டை, அதற்கு பயன்படுத்தும் ஆட்ட காய்கள் உள்ளிட்ட மிகவும் பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக விருதுநகர் மாவட்டம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது என்று இன்று நாம் சொல்லும் நிலையில், நெசவுத் தொழிலில் நூல் சிக்காமல் இருக்க பயன்படுத்தும் தக்களை என்ற பொருள் உள்ளிட்டவையும் இந்த அகழாய்வின் போது கிடைத்துள்ளன.

இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட அகழாய்வு பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள், 2 நாட்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு, மிக அருகில் உள்ள பகுதிகளில் ஏராளமாக புதையுண்டு கிடக்கும் முதுமக்கள் தாழிகள் குறித்தும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழாயிரம்பண்ணை அருகே சிவசங்குபட்டி கிராமம் உள்ளது. வைப்பாற்று கரையில் உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் புதையுண்ட நிலையில் உள்ளன. கடந்த காலங்களில் இந்த கிராமத்தில் நடைபெற்ற விரிவாக்க பணிகளின் போது அவ்வப்போது தென்படும் இந்த முதுமக்கள் தாழி இப்பகுதி மக்களிடையே பெரிய விஷயமாக பேசப்படவில்லை.இந்த முதுமக்கள் தாழிகள் சிறுவர்களுக்கு விளையாட்டு பொருட்களாகவும், பெரியவர்கள் தங்களது கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தும் பொருளாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள் குறித்து அறிய வந்த தொல்லியல் ஆர்வலர்கள், இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வைப்பாற்றங்கரை மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று காணப்படும் தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அங்கும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்