ஏழும்… எழுச்சிப்பாதையும்

திமுக என்கிற மாபெரும் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, வெற்றிகரமாக 6 ஆண்டுகளை நேற்று பூர்த்தி செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 7ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. 1953, மார்ச் 1ல் பிறந்த அவர், பள்ளி பருவத்திலேயே அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தில் 1968ம் ஆண்டு அவர் தொடங்கியதுதான் கோபாலபுரம் இளைஞர் திமுக. இதன் எழுச்சியை கண்ட அப்போதைய திமுக தலைவர் கலைஞர், 1980ம் ஆண்டு மதுரையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் திமுக இளைஞரணியை தொடங்கி வைத்தார்.

1982ல் இளைஞரணியின் மாநில அமைப்பாளராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பின் தனது விவேகமான செயல்பாடுகளில் 1984ல் இளைஞரணி செயலாளரானார். தனது அரசியல் பயணத்தின் அடுத்தக்கட்டமாக 1984ல் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. அதனால் மனம் தளராமல் கட்சிப்பணியில் தேனீயாக செயல்பட்ட அவர், அதே தொகுதியில் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலாக தமிழக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்.

தமிழகத்தில் 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பதவி ஏற்றார். இவரது காலத்தில்தான் சென்னையானது சிங்கார சென்னையாக ஜொலித்தது. தொடர்ந்து 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அமைச்சராக இவரது நிர்வாகத்திறன், சுறுசுறுப்பான செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்றார். 2015ல் தமிழகமெங்கும் நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுகவை மேலும் வலுவாக்கினார். மக்களின் குறைகளை நகரங்கள், கிராமங்களுக்கு சென்று கேட்டது, மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் போன்றவை மக்களிடையே பாராட்டை பெற்றது.

திமுகவில் துணை பொதுச்செயலாளர், பொருளாளர் என பதவி வகித்த அவர், கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது செயல் தலைவராக பொறுப்பேற்றார். 2018, ஆக. 7ம் தேதி கலைஞர் காலமான பின்னர், ஆக. 28ம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். 2019ம் ஆண்டு எம்பி தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் தேனி தொகுதி நீங்கலாக அனைத்து தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இதனைத்தொடர்ந்து நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இடையில் நடந்த உள்ளாட்சி தேர்தல்கள், 2024 எம்பி தேர்தல் என திமுகவை அடுத்தடுத்து வெற்றிகரமான கட்சியாக வழி நடத்திச் செல்கிறார் மு.க.ஸ்டாலின். கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சி தலைவர்களையும் தாயுள்ளத்தோடும் அரவணைத்தும் செல்கிறார்.

திமுக தலைவராக மட்டுமா? மாநில முதல்வராக விடியல் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம், இல்லம் தேடி மருத்துவம் என எண்ணற்ற அற்புத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை, ₹10 லட்சம் கோடி முதலீடுகள் என பொருளாதாரரீதியாகவும் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார். மாணவர் பருவத்தில் துவங்கிய அரசியல் வாழ்க்கையானது, தற்போது ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும், மாநிலத்தின் தலைசிறந்த முதல்வராகவும் மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியுள்ளது என்பது மிகையல்ல.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு