மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரச முறையில் 694 வழக்குகளுக்கு தீர்வு

ஊட்டி : உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகா நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. ஊட்டி காக்காதோப்பு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைத்தார். இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான செந்தில்குமார், குடும்ப நல நீதிபதி லிங்கம், தொழிலாளர் சட்ட நீதிபதி சந்திரசேகர், உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாரதி பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த காசோலை மோசடி வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், வங்கி வழக்குகள், குடும்ப பிரச்சனை சம்பந்தமான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாரா கடன் தொடர்பான வழக்குகள் என 1200க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 694 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.8 கோடியே 9 லட்சத்து 72 ஆயிரத்து 199 ஆகும். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்படுகிறது.
இதன் மூலம் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். மேலும் நேரம், பண விரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படுகிறது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது