வீட்டிலேயே தயாரிக்கலாம் சீரம் +ஃபேஸ் பேக்!

பண்டிகை, அல்லது விசேஷ நாளில்தான் அட முகம் இவ்வளவு டல்லாக இருக்கிறதே என்ன செய்யலாம் எனும் எண்ணமே தோன்றும். வீட்டிலேயே சரும ஆரோக்கியத்திற்கான சீரம், ஃபேஸ் பேக் மற்றும் ப்ளீச் எப்படி செய்யலாம் செய்முறை விளக்கம் கொடுக்கிறார் கீதா அசோக் (அரோமா தெரபிஸ்ட் மற்றும் சரும நிபுணர்)

இயற்கை சீரம் + ஃபேஸ் பேக்

தேவையானவை

கமலா ஆரஞ்சு பழ தோல்
லெமன்
சிவப்பு சந்தனப் பவுடர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
பால் பவுடர்.

சீரம் தயாரிக்க

கமலா ஆரஞ்ச் பழத் தோல்களை பொடிப் பொடியாக நறுக்கி இரண்டு நாட்கள் தண்ணீரில் போட்டு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து அவை நன்கு நொதித்து நிற்கும். அவற்றை அப்படியே மிக்ஸியில் அரைத்து அந்த நீரை வடிகட்டி அதில் அரை எலுமிச்சை பிழிந்து ஒரு பாட்டிலில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு சீரமாகப் பயன்படுத்தலாம்.

ஃபேஸ் பேக் தயாரிக்க

சீரம் தயாரித்த பின் அரைத்த கமலா ஆரஞ்சு தோல் நீரை வடித்த பின் கிடைக்கும் பல்ப்புடன் பால்பவுடர் சேர்த்து, ஒருவேளை வறண்ட சருமம் கொண்டவர்கள் எனில் இனிப்பு பால் பவுடர் சேர்க்கலாம். ஆயில் சருமம் எனில் இனிப்பில்லா பால் பவுடர் சேர்க்கலாம். இனிப்பான பால் பவுடரில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால் வறண்ட சருமத்திற்கு போதுமான ஹைட்ரேஷன் கொடுக்கும். இதனுடன் சிவப்பு சந்தனப் பொடி ரெண்டு டீஸ்பூன், சேர்ந்து மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இந்தப் பேஸ்டையும் ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக்கொண்டு தினமும் பயன்படுத்தலாம். இவ்விரு சீரமும், ஃபேஸ் பேக்கும் தினமும் பயன்படுத்தலாம். மேலும் கமலா ஆரஞ்ச் தோலில் இயற்கையான வைட்டமின் சி கிடைப்பதால் சருமத்திற்கு ஆரோக்கியம் கொடுக்கும். சீரம் தூங்குவதற்கு முன் விரலில் தொட்டு முகத்தில் தடவிக்கொண்டு தூங்க நிச்சயம் பளிச்சென முகமும், வெயிலால் உண்டான கருமையும் நீங்கும்.
‘ஒரு வாரமெல்லாம் நேரமில்லை இன்னும் எனக்கு வெகமாக, இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் தயாராக வேண்டும் என்போர் இந்த உருளை ப்ளீச் பேக் பயன்படுத்தலாம்.

உருளைக் கிழக்கு லைட்னிங் பேக்

தேவையானவை

உருளைக் கிழங்கு – 2
கொத்தமல்லி சாறு – சிறிதளவு
கார்ன் மாவு – 2 டீஸ்பூன்
சர்க்கரை -1 டீஸ்பூன்
ஆரஞ்சு தோல்.

செய்முறை

உருளைக் கிழங்கை நன்கு துருவி, அதனை வடிகட்டியில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் அழுத்தினால் கிடைக்கும் சாறை அப்படியே ஒரு பாத்திரத்தில் விட்டுவிடவும். சிறிது நேரத்தில் மேற்புற நீர் கருமையாகும். அதனை நீக்கி விடவும். அடியில் தங்கும் ஸ்டார்ச்தான் நம் சருமத்திற்கான பளீச் நிறம் கொடுக்கும் இயற்கையான ப்ளீச். அதனுடன் கொத்தமல்லியை நீர் ஊற்றாமல் கெட்டியாக அரைத்து விழுதாக சேர்த்துக்கொள்ளவும். ஆரஞ்சு தோல் இருப்பின் அதனை அரைத்து பவுடராக சேர்த்துக்கொள்ளலாம். இல்லையேனில் கார்ன் மாவு சேர்த்துக்கொள்ளலாம். மேலும் சர்ர்க்கரை சேர்த்து விழுதாக்கி இந்தக் கலவையை முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ பளிச்சென முகம் பளபளக்கும். இதில் உருளை, கொத்தமல்லி, சர்க்கரை, கார்ன் மாவு அல்லது ஆரஞ்சு தோல் எல்லாமே முகத்தை இயற்கையாக ப்ளீச் செய்து கருமையை நீக்கும் திறன் கொண்டவை என்பதால் உடனடியாக தயாராக இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு