தொடர் விடுமுறையால் கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*3 நாட்களில் 4500 பேர் வருகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. 3 நாட்களில் 4500 பேர் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. ரம்மியமாக கொட்டிய நாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கால் சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மழை குறைந்து தண்ணீர் ரம்மியமாக கொட்ட ஆரம்பித்தது.இதையடுத்து, கடந்த 24ம் தேதி முதல் கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். 24ம் தேதி சனி, 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று கோகுலஷ்டமி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

நேற்று கோகுலஷ்மியையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானது. அதிலும் பலரும் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் பலர், ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். மேலும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும், அருவியின் முன்பு குளம்போல் தேங்கிய தண்ணீரில் சறுக்கி விளையாடி ஆனந்த குளியல் போட்டனர்.

தொடர் விடுமுறையையொட்டி குவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 4500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்ததாகவும், தற்போது மழையின்றி தண்ணீர் ரம்மியமாக கொட்டுவதாலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!

டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்