கோடைக்கால தொடர் விடுமுறை ஆரம்பம் ஏலகிரி மலையில் திரளும் சுற்றுலா பயணிகள்: பொழுதுபோக்கு அம்சங்களை குடும்பத்தோடு கண்டு கழித்தனர்

ஏலகிரி: கோடை கால தொடர் விடுமுறை ஆரம்பமாகி உள்ளதால், ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். பொழுதுபோக்கு இடங்களில் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் விளையாடி மகிழ்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இம்மலை தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று ஏலகிரி மலை மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தின் அருகில் உயர்ந்த மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

இம்மலை சுமார் 1410 மீ உயரத்தில், மேற்பகுதியில் நான்கு மலைகளால் சூழப்பட்டு 14 சிறிய கிராமங்களைக் கொண்டு இயற்கையாக காணப்படுகிறது. இந்த உயர்ந்த மலையில் எப்பொழுதும் குளிர்ந்த சூழ்நிலையே காணப்படுகிறது. ஏழைகளின் ஊட்டியாக விளங்கும் இந்த ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, செல்பி பார்க், நிலாவூர் பாண்டேரா பார்க், இயற்கை மூலிகை பண்ணை, மங்கலம் சுவாமிமலை மலையேற்றம், ஏலகிரி மலை அடிவாரம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, சாகச விளையாட்டு உள்ளிட்டவை ஏலகிரி மலையில் சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. இதனைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருநதும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் குடும்பத்தோடு வந்து செல்கின்றனர்.

ஏலகிரியில் மலையேறும் பொழுது 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் பார்வை மையம் உள்ளது. இங்கிருந்து வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி ஆகிய சமவெளிகளை காணலாம். இந்த நிலையில், கோடை விடுமுறை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் ஏலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. படகு இல்ல சாலையில் உள்ள சாகச விளையாட்டுத் தலத்தில் குழந்தைகள் படகுகள் ஓட்டியும், தொடர்வண்டியிலும், ரோப்பில் சென்றும் மகிழ்ந்தனர்.

மேலும் நிலாவூர் பண்டேரா பார்க்கில் முயல்கள், நெருப்புக் கோழி, நாய் வகைகள், பாம்பு வகைகள், உள்ளிட்ட செல்லப்பிராணிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். அனைத்து தனியார் விளையாட்டு கூடங்களிலும் இதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. படகு இல்லங்களில் ஒரு நபருக்கு ரூபாய் 50 குறைந்த கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியாக பெடல் செய்து படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

படகு இல்லம் அருகில் உள்ள இயற்கை பூங்காவில், குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், மலர்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, இளைப்பாறும் விதமாக புல்வெளிகள் உள்ளிட்டவை பார்த்து ரசிக்கும் பகுதியாக அமைந்துள்ளது. படகு சாலையில் உள்ள மூலிகை பண்ணையில் அனைத்து வகையான வியாதிகளுக்கு மருந்தாக, மூலிகைச் செடிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அனைத்து சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு மூலிகை செடிகளை வாங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் ஏலகிரி மலையே களை கட்டி உள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்