சேரங்கோடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தாசில்தார் இடையில் எழுந்து சென்றதால் பொதுமக்கள் ஆவேசம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் தாசில்தார் இடையே எழுந்து சென்றதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம்,கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சியின் 75வது குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் எருமாடு அருகே மணல்வயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வலாகத்தில் தலைவர் லில்லிஎலியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

துணை தலைவர் சந்திரபோஸ் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் சஜீத் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, நூறுநாள் வேலைத்திட்டம் செயல்பாடுகள், கலைஞர் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம், வாக்காளர் தினம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மாநில வாழ்வாதாரம் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள், சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர்,மின்சாரம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதம் நடைபெற்றது, டேன்டீ பகுதியில் தெரு விளக்குகள், நடைபாதை, மயானத்திற்கு சாலைவசதி, மின் ஊழியர்கள் முறையாக வீடுகளில் மின் அளவீடு செய்யவேண்டும் என பல்வேறு பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர். பொதுமக்களுக்கு பதில் அளித்து பேசிய துணை தலைவர் சந்திரபோஸ் அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சென்றதால் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தாசில்தார் ஏன் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளாமல் சென்றார்?.அவர் பதில் அளிக்கவேண்டிய பிரச்னைகளுக்கு வேறு யாரும் பதில் சொல்ல முடியாது எனவே, தாசில்தார் உடனடியாக வரவேண்டும் என கூச்சலிட்டனர். விஏஒ யுவராஜ் தாசில்தார் வேறு ஒரு கூட்டத்திற்கு சென்றுள்ளார் என சமாதானம் செய்தார்.

ஆனால் ஒரு சிலர் தாசில்தார் வரவேண்டும் என சிறிது நேரம் காத்திருந்தனர் தாசில்தார் வராததால் கூட்டத்தை முடித்துக் கொண்டனர். கூட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய பணிமேற்பார்வையாளர் வசந்த், சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், டேன்டீ கோட்ட மேலாளர் புஷ்பராணி, சேரம்பாடி ரேஞ்சர் அய்யனார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஊராட்சி கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்