நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திமுகவில் தனித்தனி வார் ரூம்: பணிகளை ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களும் தயார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வார் ரூம் அமைக்கப்படுகிறது. மேலும் பணிகளை ஒருங்கிணைக்க பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு என திமுக 3 குழுக்களை அமைத்துள்ளது.

இந்த குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி மேலாண்மை, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பாளராக திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பொறுப்பாளராக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை கழகத்தில் உள்ள வார் ரூமை 08069446900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டம், சட்டமன்ற தொகுதி, காவல்நிலைய எல்லைக்கு 3 வழக்கறிஞர்கள் என்ற அளவில் அமர்த்தப்பட உள்ளனர். தலைமை கழகம் தேர்தல் பணி வழக்கறிஞர்களாக தேர்தல் வழக்குகள், நீதிமன்றக்குழுவில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ஆர்.விடுதலை, பி.வில்சன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன், தேர்தல் ஆணையம் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிக்கு வழக்கறிஞர்களாக அ.சரவணன், ஜெ.பச்சையப்பன், காவல்துறை-புகார் மற்றும் பாதுபாப்பு வழக்கறிஞர்களாக அஸ்வின் பிரசன்னா, அர்ஜுன். மண்டல ஒருங்கிணைப்பாளர்கள்- வழக்கறிஞர் இ.பரந்தாமன் எம்எல்ஏ., கே.எஸ்.ரவிச்சந்திரன், கரூர் மணிராஜ், ஈரோடு ராதாகிருஷ்ணன், கே.சந்துரு, சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வார் ரூமில் வழக்கறிஞர்கள் மருதுகணேஷ், ரகு, நந்தகோபால், உதயகுமார், ஏ.முகமது அர்ஷத், விஸ்வநாதன், ஜெயராமன், பி.ஐயப்பன், சங்கர் கணேஷ், ஜெய்கணேஷ், கார்த்திகேயன், திருக்குறளார், ஏ.என்.சிவவேலு, சரத்குமார், சிவசங்கர், சேனாதிபதி, சசிதரன், சரவணக்குமார், தினகரன், ராஜ் குமார், சதீஷ் குமார், அர்ஜூனன், வி.அருண் ராஜன், ஜி.என்.ஆண்டனி பிரபு, முத்துகுமார், முல்லை ஜசல்வன், எஸ்.பி.லட்சுமணன், ஜி.சந்திர போஸ், ஜோசப் பாரி, வேலுசாமி, இ.மகேஷ், டி.ரவிசங்கர், எல்.சுந்தரமூர்த்தி ஆகிய 33 ேபர் பணியாற்ற உள்ளனர்.

* எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவதுதான் வேலை
வார் ரூம் என்பது தொகுதி மக்களின் மனநிலை, வாக்காளர்களின் விருப்பு வெறுப்புகள், எந்தெந்த சமூக பின்னணி என்பதில் தொடங்கி, நிறுத்தப்படும் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன தகுதியை கொண்டிருக்க வேண்டும் என்பதை வகுப்பது வரை அனைத்தையும் வார் ரூம்களே தலைமைக்கு அறிவுறுத்துகின்றன. பரப்புரையில் என்ன பேச வேண்டும், பரப்புரை போஸ்டர்கள், நோட்டீஸ்கள் உள்ளிட்டவை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வார் ரூம்களே தீர்மானிக்கின்றன.

ஒரு கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனை டிரெண்ட் செய்வது இவர்களின் வேலை தான். மேலும் எதிர்க்கட்சிகள் செய்யும் அனைத்து விதமான செயல்களுக்கும் பதிலடி இவர்கள் தான் கொடுப்பார்கள். மேலும் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பார்கள்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்