செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதி விசாரணை சனிக்கிழமை விசாரிக்கலாமா என்பது குறித்து இன்று முடிவு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை , சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதிமீறல் நடந்துள்ளது என்றும், அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியும் அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 4ம் தேதி இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.

நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை. அவர் உடல்நிலை குணமானவுடன் அமலாக்கத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இறுதி முடிவை எடுக்க 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். அவரது முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, நீதிபதி, இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வழக்கை வெள்ளிக்கிழமை (இன்று) மதியம் 2.15 மணிக்கு பட்டியலிடுகிறேன். அப்போது, இரு நீதிபதிகளின் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

அப்போது, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சனிக்கிழமை (நாளை) தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்தார். அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞரும் சம்மதம் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, சனிக்கிழமை விசாரணையை நடத்துவதற்கு தலைமை நீதிபதியின் அனுமதி தேவை. அனுமதி கிடைத்தால் சனிக்கிழமை இந்த வழக்கை விசாரிக்கலாம். தொடர்ந்து திங்கட்கிழமையும் விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தார்.

* கேஸ் டைரியா, ஆவணமா?
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நேரம் தொடர்பாக இரு தகவல்கள் உள்ளன. அதனால் கேஸ் டைரியை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அமலாக்கத்துறை போலீஸ் அல்ல. அவர்களிடம் எப்படி கேஸ் டைரி இருக்கும் என்றார். அவர்களால் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்றார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் வழக்கு ஆவணங்கள் என்றுதான் கூற வேண்டும். ஆவணங்களை தாக்கல் செய்கிறோம் என்றார்.

Related posts

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ’ஓவியச் சந்தை’

அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி சந்திப்பில் உடன்பாடு; ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு: இன்று நடக்கும் உச்சி மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து