திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு..!

சென்னை: திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு விரைந்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காலை முதலே சோதனை நடக்கிறது. நாங்கள் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும். எப்படி இருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். என அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால், அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; மனித உரிமையை மீறும் வகையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிய விரும்பினோம். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நிலை என்ன ஆனது என கேட்டோம், அதிகாரிகளிடம் பதில் இல்லை. அவரையாவது இங்கு அனுப்புங்கள் என சொன்னோம், அதற்கும் செவி சாய்க்கவில்லை. தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெறாமலேயே தலைமைச் செயலகத்தில் அத்துமீறி சோதனை செய்து வருகின்றனர்.

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதிமுக – பாஜக விவகாரத்தை திசை திருப்பவே திட்டமிட்டு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியை சந்திக்க அமலாக்கத் துறை அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் ஒரு மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை. ரெய்டுகளால் ஒரு மனிதனின் புகழை எதுவும் செய்ய முடியாது; ரெய்டுகளை கண்டு அச்சப்படவில்லை என்றும் கூறினார்.

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை