முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட்டில் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜி தற்போது வரை சென்னை புழல் சிறையில் உள்ளார்.

இதில் கடந்த முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்து வருவதால் அவரது வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனுவை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் ஆஜராக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரி அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்தனர்.

இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்