செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர். மணல் திட்டில் அமர்ந்து கொண்டு, சுந்தரத் தமிழில் அழகாகப் பாடவும் செய்தார். பாண்டிய நாட்டில், பிறந்தவர் அவர். இவரது இளமை பருவத்தில், தவத்தில் சிறந்த முனிவர் ஒருவர், இவருக்கு முருகனின் ஆறு எழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதை விடாமல் ஜெபித்து வந்தார் இந்த கந்தசாமி புலவர். முருகன் அருளால், அழகு, அறிவு, மகிமை, தேஜஸ், இளமை, நொடியில் கவிப் பாடும் திறன் எனப் பலவும் அவரை வந்து அடைந்தது. கேட்போர் மனம் குழையும் அளவு, கவிப் பாடும் வல்லமையைப் பெற்றார் அவர்.

செந்தில் ஆண்டவனுக்கு, சுந்தரத் தமிழால் பாமாலைகளை சாற்றி வழிபடும் எண்ணத்தோடு திருச்செந்தூர் வந்தார். கந்தனை கண்ணார கண்டவர், இப்போது வாயாரக் கவிதை மழைப் பொழியத் தொடங்கினார். கோயிலில், அர்த்த ஜாம பூஜைகள் முடிந்து, நடைச் சாற்றப் பட்டுவிட்டது. அவர் அமர்ந்திருந்த மணல் திட்டின் அருகே, யாருமே இல்லை. திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் இருந்த அந்த மணல் திட்டில், தன்னந்தனியாக அமர்ந்திருந்தார், புலவர்.

“நீ தனியாக இல்லை. அப்பனே.. நானும் உன் உடனேயே இருக்கிறேன்’’ என்று சொல்வது போல கடல் அன்னை அலையோசை எழுப்பியப் படி இருந்தாள். நிலவும் மென்மையான தனது பால் நிற ஒளியை வீசியப் படி இருந்தது. கடலில் இருந்து வீசும் வாடை காற்று, இதமாக இருந்தது. ஆனால், இது எதையும் ரசிக்காமல் உள்ளத்தில், கந்தன் திருவடியை பதித்து, அதை எண்ணியப் படி அகம் மகிழ்ந்துக் கவிதை மழையைப் பொழிந்து கொண்டு இருந்தார் அவர்.

அப்போது திடீர் என்று, தனதுப் பாட்டை நிறுத்தியவர், தனது கையில் அடக்கி வைத்திருந்த ஒரு சிறுப் பெட்டியை திறந்தார். அதில், வெற்றிலையும் பாக்கும் இருந்தது. ஒரு சிறுப் பாக்கு துண்டை வெற்றிலையில் வைத்து மடித்து, அதை வாயினுள் திணித்துக் கொண்டார். பிறகு, அதை மென்று கொண்டே பாடினார். நொடிகள் நிமிடங்கள் ஆகி உருண்டு ஓடியது.

இதற்குள், தமிழ்ப் பாடியப் படி, வாயில் இருந்த வெற்றிலையை நன்றாக மென்று இருந்தார், புலவர். தனது இதழ்களின் மீது இரண்டு விரலை வைத்து, அதன் வழியே வாயில் இருந்த வெற்றிலையை வெளியே உமிழ்ந்தார். பிறகு பாடத் தொடங்கினார். இப்படியே அன்று இரவு கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்தது. கோயிலின் நடையை சுப்ரபாதம் பாடி திறந்தார்கள் சிவாச்சாரியார்கள். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. அதைக் கண்டுப் பேசவும் முடியாமல், வாயடைத்து போய் நின்றார்கள் சிவாச்சாரியார்கள்.

கண்கள் துக்கத்தின் மிகுதியால் குளமானது. பெரிய அபச்சாரம் நிகழ்ந்துவிட்டப் பதற்றத்தில், கை, கால்கள் வெடவெடத்தது. “அப்பனே முருகா…! உனக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்தது யார்’’? என்று பெரிதாக ஓலமிட்டு கதறியப் படி சிவாச்சாரியார்கள், முருகனின் திருமுன்பு நெடுஞ்சான் கிடையாக விழுந்தார்கள். அவர்கள் அப்படித் துடித்ததுக்கு காரணம் இல்லாமல் இல்லை. முருகனுக்கு நேற்று இரவு அணிவித்த வெள்ளை வேஷ்டியில், சிவப்பாகக் கறை இருந்தது. அதுவும், யாரோ வெற்றிலையை மென்று உமிழ்ந்த எச்சில்கறை. நித்தமும் மூன்று வேளையும் திரிகரண சுத்தியோடு அவர்கள் பூஜித்து வந்த இறைவன் மீது, யார் உமிழ்ந்தார்கள் என்று அறியாமல் திண்டாடினார்கள் சிவாச்சாரியார்கள். அவர்கள் துடிப்பதைக் கண்டு முருகன் உள்ளம் கனிந்தது.

“எனதருமை தொண்டர்களே… தீந்தமிழ் ஒலிக்கும் இடத்தில் தமிழ் கடவுளான நான் நிச்சயம் இருப்பேன். நேற்று எனது பக்தனான கந்தசாமி புலவன், கோயிலின் அருகே இருந்த மணல்திட்டில் அமர்ந்துக் கொண்டு, அழகாகத் தமிழ் கானம் செய்தான். அந்த செந்தமிழ் கவியை கேட்க, நான் இங்கிருந்து நீங்கி அவன் அருகில் சென்று நின்று கொண்டேன். நான் வந்தது தெரியாமல், அவன் வாயில் மென்று கொண்டிருந்த எச்சிலை, நான் இருந்த திசையில் உமிழ்ந்தான். அதுதான் என் மீது பட்டு தெறித்தது. அதன் கறைதான் இது.தீந்தமிழ் பாடிய வாயில், ஊறிய எச்சிலும் எனக்கு இனிமையாகவே இருக்கிறது. ஆகவே, கவலை வேண்டாம்’’ என்று சந்நதிக்குள் இருந்தப் படியே குரல் கொடுத்தான் செந்தில்
ஆண்டவன்.

அவனது குரல், தேனாக வந்து சிவாச்சாரியார்கள் காதில் பாய்ந்து. அவர்களது மனக்கவலையை நீக்கியது. கந்தனுக்கு தமிழில் இருந்த காதலையும், தமிழை நேசிக்கும் புலவர்கள் பால் இருந்த காதலையும் எண்ணிஎண்ணி வியந்தார்கள், அவர்கள். ஆனந்த கண்ணீர் சொரிந்தார்கள். கந்தசாமி புலவரை தேடிச் சென்றுக் கந்தன் அருள் பெற்ற அவரின் பாதத்தில் விழுந்து சேவித்தார்கள். அவர் எழுதிய கவிதைக் கண்டும், கேட்டும், படித்தும் மெய்சிலிர்த்துப் போனார்கள். ஆனால், விதி வசத்தால் ஒரு முறை இந்த கந்தசாமி புலவருக்கு கண்பார்வை இல்லாமல் போனது. அப்போதும் திருச்செந்தூர் முருகனின் அருளால் அவரது பார்வையை திரும்பப் பெற்றார். அந்த வரலாறையும் சற்றுக் காண்போம் வாருங்கள்.

திருச்செந்தூர் திருக்கோயில் இன்று போல் அன்றும் அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. கோயிலில் ஒரேக் கூட்டம். அப்போது ஓர் அரண்மனை காவலாளி; ‘‘மாமன்னர், பால் பாண்டியன் வருகிறார் பராக் பராக்…’’ என்று அறிவித்தான். உடனே கூட்டம் இரண்டாகப் பிளந்து மன்னனுக்கு வழிவிட்டது. ஆஜானுபாகுவாக வீர களை சொட்ட அந்த பால் பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழைந்தார். நேராக சந்நிதானத்திற்கு சென்றார். கையிரண்டையும் தலைமேல் குவித்து வணங்கினார். பக்தியின் பெருக்கில் ‘‘செந்தில் ஆண்டவா!’’ என்று உறுகினார்.

குருக்கள், ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு வந்தார். மன்னனுக்கு பிரசாதம் வழங்கிக் கொண்டே, ‘‘அரசே! கந்தசாமி புலவர் என்ற புலவர் ஒருவர் இருக்கிறார். அவர் செந்தில் ஆண்டவனின் சிறந்த பக்தர். பெரும் தமிழ் புலவர். ஆனால் விதிவசத்தால் அவரது இரண்டுக் கண் பார்வையும் போய்விட்டது. கண்கள் குருடாகிய வருத்தத்தில் இருந்த புலவர், செந்தில் ஆண்டவனை வழிபட்டார். அவரது அருளால், வலது கண் பார்வை இப்போது நன்றாகவே தெரிகிறது. ஆனால்…..!?”“ஆனால்…. என்ன.. ஆனால்? சொல்லுங்கள் குருக்களே..’’ என்று பால் பாண்டியன் விடாமல் கேட்டார்.

“அவர் இடது கண் பார்வையை மீண்டும் பெற நீங்கள்தான் பெரிய மனது செய்ய வேண்டும்’’ என்று பட்டார் தயக்கத்தோடு கேட்டார்.“நான் என்ன செய்ய முடியும் குருக்களே..’’ ஒன்றும் விளங்காமல் கண்களை உருட்டியபடியே கேட்டான், பால் பாண்டியன். குருக்கள் தொடர்ந்தார்.“அவர் பார்வை பெறுவதற்கு இங்கு வந்து செந்திலாண்டவனை பூஜித்து விரதமிருந்தார். கந்தன் கருணையால் அவருக்கு இப்போது வலது கண் நன்றாகத் தெரிகிறது. இடது கண் பார்வையை உங்களால்தான் தரமுடியும்! கொஞ்சம் அவருக்கு கருணை செய்யுங்களேன்…’’

‘‘என்னால் என்ன செய்ய முடியும்? விளையாடுகிறீர்களா..?’’ குழம்பியபடியே கேட்டான், மன்னன்.

‘‘இல்லை மன்னா! நேற்று அவர் கனவில் முருகன் தோன்றி நீங்கள் அவரது இடது கண்ணை தொட்டால் போதும் பார்வை வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே சற்று தயவு செய்யுங்களேன்…’’ என்று குருக்கள் கேட்டதும், மன்னனின் உடல் சிலிர்த்தது. கண்கள் பணித்தது. செந்தில் பரம்பொருளை கண்களால் ஒருமுறை தரிசித்துவிட்டு பேசத் தொடங்கினார்.‘‘ஒன்றுக்கும் உதவாத இந்த கட்டை… கந்தனின் அடியவர்களுக்கு பார்வை தரப்போகிறது! இது நான் செய்த பாக்கியம். இருந்தாலும், இந்த கட்டைக்கு பார்வை தரும் அளவிற்கு சக்தி உள்ளதா? என்று தெரியவில்லை. ஆகவே, இன்று இரவு முழுதும் இதோ.. இந்த முருகன் முன்பே தியானத்தில் அமரப் போகிறேன். முருகனின் நாம ஜபம் இந்த கைக்கு சக்தியை கொடுக்கும்…’’ என்று சொல்லிவிட்டு உடனே பத்மாசனம் போட்டுத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கொஞ்சம்கூட ஆடாமல் அசையாமல் ரிஷி முனிவர்கள் போல் பல மணிநேரம் தியானம் செய்தார். வாயோ ‘முருகா.. முருகா..’ என்று ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடியும் வரை அவர் தியானம் நீடித்தது. தவத்தைக் கலைத்து எழுந்த உடன், கையில் முருகனின் விபூதியை எடுத்துக் கொண்டார். தனக்கு எதிரில் இருந்த கந்த சாமி புலவரின் நெற்றியில் அதை இட்டு, அவரது இடதுக் கண்ணைத் தன்கைகளால் வருடிவிட்டார். உடனே, காந்தசாமி புலவருக்கு இடது கண்ணிலும் பார்வை வந்துவிட்டது!

இப்படி ஒரு திருவிளையாடல் செய்து, கந்தசாமி புலவரின் பெருமையையும், பெரும் முருக பக்தரும் குறுநில மன்னருமான பால் பாண்டிய மன்னனின் மகிமையையும் உலகறிய செய்துவிட்டான் முருகப் பெருமான். மேலே நாம் கண்ட அதிசய வரலாறு, “வன்னச்சரபம் தண்டபாணி’’ சாமிகள் எழுதிய, “புலவர் புராணம்’’ என்ற நூலிலும், சேய் தொண்டர்கள் என்ற நூலிலும் வெகு அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது.

கந்தசாமி புலவர், செந்தில் ஆண்டவன் மீது “நொண்டி கவி’’ நாடகம் எழுதி, வலது கண் பார்வையை பெற்றார் இல்லையா? அந்த நொண்டி கவி நாடகம் இன்றும் நமக்கு முழு வடிவில் கிடைக்கிறது. சொற்சுவையும், பொருட்சுவையும் பொதிந்த நூல் அது என்று தமிழ் அறிந்த சான்றோர்கள் இன்றும் அதை போற்றுகிறார்கள். தமிழ் மனம் கமழும், அடியவரின் உமிழ் நீரையும், உவந்து ஏற்ற சிங்கார வேலனை, செந்தில் பதி காவலனை, செந்தமிழால் பாடி நாமும் நற்கதி பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related posts

இந்த வார விசேஷங்கள்

செவ்வாய்க்கிழமை நல்ல நாளா, இல்லையா?

கலைமகளின் கவின்மிகு கோயில்கள்