செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் மேற்பார்வையாளர் வெட்டி படுகொலை

செங்கோட்டை: செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் முன்விரோதத்தில் தூய்மைப் பணி மேற்பார்வையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. தென்காசி யூனியன் முன்னாள் துணை சேர்மனான இவர், தற்போது திமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்களது மகனான ராஜேஷ் (24), செங்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கான மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 11 மணியளவில் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவர், நகராட்சி வளாகத்தில் ஒரு மரத்தடியில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்க முயன்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர், ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ், பைக்கில் இருந்தபடியே உயிரிழந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நாங்குநேரியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (22), மாரி (19) ஆகிய இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் சரணடைந்தனர். விசாரணையில் நெல்லை அடுத்த தாழையூத்து பகுதியில் இருந்து ரயிலில் டீ விற்கும் கான்ட்ராக்ட் வேலை செய்த மந்திரமூர்த்தி, மாரிக்கும், ராஜேசுக்கும் குளிக்கச் செல்லும் இடத்தில் ஏற்ட்ட தகராறில் முன்விரோதம் உருவானதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் மீது தீராத பகையில் இருந்து வந்த இருவரும் காத்திருந்து பழி தீர்த்ததாகக் கூறப்படுகிறது.

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி