செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்: பயணிகள்கோரிக்கை

சிவகாசி: செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயிலில் குறைவான பெட்டிகளே உள்ளதால் பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ரயிலில் நின்றபடி பயணம் செய்து வருகின்றனர். எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-மயிலாடுதுறை மற்றும் மதுரை-செங்கோட்டை ரயில்கள் இணைக்கப்பட்டு செங்கோட்டை – மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. மதுரை-செங்கோட்டை வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் இருந்து காலை 7:00, 11:30, மாலை 5:20 மணி என மூன்று பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இதில் மாலை 5:20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரயிலில் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், தொழில், வியாபார நிமித்தமாக தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசியில் இருந்து வருபவர்கள் பயணித்து வந்தனர். மாலை நேரத்தில் மதுரையில் இருந்து புறப்படும் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருந்ததால் பிற்பகலில் மதுரை – செங்கோட்டை இடையே கூடுதல் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கொரோனா ஊரடங்கிற்கு பின் செங்கோட்டை – மதுரை வழித்தடத்தில் இயங்கும் 3 பயணிகள் ரயில்களும் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. ஆனால் கூடுதல் ரயில்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், வழக்கமான ரயில்களில் கூட்ட நெரிசல் குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திண்டுக்கல் – மயிலாடுதுறை ரயில், மதுரை – செங்கோட்டை ரயிலுடன் இணைக்கப்பட்டு செங்கோட்டை – மயிலாடுதுறை சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் கூடுதல் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒன்பது பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே மதுரை – செங்கோட்டை ரயிலில் நெரிசலில் பயணித்து வந்த மக்கள், தற்போது ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நின்றபடி பயணித்து வருகின்றனர். மயிலாடுதுறை – செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கிறது.

இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான மக்கள் இந்த ரயிலில் பயணிப்பர். இந்த வழித்தடத்தில் உள்ள தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்ட மக்களின் நலன் கருதி மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது