செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரசில் காற்றாடும் ஏசி பெட்டிகள்: ஸ்லீப்பர் கோச்சுகள் அதிகரிக்கப்படுமா?

நெல்லை: பள்ளிகள் திறந்த நிலையில் செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டிகள் கூட்டமின்றி செல்கின்றன. எனவே ஏசி பெட்டிகளை அகற்றிவிட்டு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு வாரம் மும்முறை ரயில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, நெல்லை வழியாக செங்கோட்டைக்கு அதிவிரைவு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர் சோதனை ஓட்டமாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவற்ற கட்டணமாக ரூ.260ம், தூங்கும் வசதி உள்ள பெட்டியில் ரூ.435ம், மூன்றடுக்கு ஏசி கோச்சில் ரூ.1060ம், இரண்டடுக்கு ஏசி கோச்சில் 1620 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் மொத்தம் 17 ரயில் பெட்டிகள் உள்ளன. அவற்றில் 3 முன்பதிவிலா பெட்டியும், 2 இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியும், 5 தூங்கும் வசதியுள்ள பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி இந்த ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டியில் மொத்தம் உள்ள 104 இருக்கைகளில், 42 இருக்கைகள் காலியாக கிடந்தன. மேலும் 400 இருக்கைகள் உடைய மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில், 129 இருக்கைகள் காலியாக இருந்தன. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் துவங்கியுள்ளதால் இந்த ரயிலில் இதுவரை இல்லாத அளவிற்கு இருக்கைகள் காற்றாடுகின்றன. ரயில் நீண்ட சுற்றுப்பாதையில் செல்வதால், தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டால், செங்கோட்டை சென்றடைய காலை 11 மணி ஆகிறது. இதனால் செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் மிகவும் குறைந்த அளவே இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

மேலும் இந்தியாவில் ஓடுகின்ற பெரும்பாலான ரயில்களில் ஸ்லிப்பர் பெட்டிகள் மட்டுமே அதிகமாக இருக்கும். ஏசி பெட்டிகள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படும். ஆனால் இந்த ரயிலில் மட்டும் மற்ற ரயில்களை விட குறைந்த அளவு ஸ்லீப்பர் பெட்டிகளும், அதிகமாக ஏசி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 400 ரூபாய் கொடுத்து ஸ்லீப்பர் கோச்சில் செல்பவர்கள், ரூ.1060 கொடுத்து ஏசி கோச்சில் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில் பயண நேரம் அதிகமாக உள்ளது. ஏசி கோச்சுகளும் அதிகம் என்பதால் பல பயணிகள் அதில் பயணிக்க தயங்குகின்றனர்.

தென்காசி வழியாக இயக்கப்படும் பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ்களே பயணிகளின் முதல் தேர்வாக உள்ளது. எனவே செங்கோட்டை- தாம்பரம் வாரம் மும்முறை ரயிலில் ஏசி கோச்சுகளை குறைத்துவிட்டு, கூடுதலாக இரண்டு அல்லது மூன்று ஸ்லீப்பர் கோச்களை இணைக்க வேண்டும் என ரயில்வேயை வலியுறுத்தி வருகிறோம். மேலும் காலை 10 மணிக்குள் செங்கோட்டைக்கு இந்த ரயில் வந்து அடையுமாறு கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். இந்த ரயிலுக்கு தாமிரபரணி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்ட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும். செங்கல்பட்டு, அதிராமபட்டினம், மானாமதுரை, கல்லிடைக்குறிச்சி, கீழ கடையம் ஆகிய ரயில் நிறுத்தங்களை இந்த ரயிலுக்கு உடனே வழங்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறோம்.’’ என்றார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு